Sunday, June 14, 2015

குஜ்ஜூ அம்மணி பேசியது என்ன?

வேலைக்குப் போக நியூயார்க் நகரத்திற்கு 2 மணி நேரம் பயணப்பட்ட வேண்டும். ரயிலில் ஒரு மணிநேரம் போகவேண்டியிருக்கும், மீதம் நடந்தும் நியூயார்க் நகர உள்ளூர் ரயிலும் பயணப்பட வேண்டும். அதில்தான் எவ்வளவு சுவாரஸ்யங்கள் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு, செம மொக்கையாக இருக்கும். அதுவும் அமெரிக்க ரயில் பயணங்களில் நீங்களே உங்களை பொழுது போக்கிக்கொள்ள பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த ஒரு மணி நேரப் பயணத்தை தூங்கிக் கழிக்கலாம் என்று பல முறை நினைத்திருக்கிறேன். ஆனாலும் ஏதோவொன்று தினமும் விழித்திருக்கச் செய்துவிடும். 

இன்று காலை ரயிலில் ஏறியதுமே கண்டேன், கூட்டம் குறைவு, வெள்ளிக்கிழமை ஆதலால் வீட்டிலிருந்தே வேலை செய்வது மக்களுக்கு வழக்கமாகிப் போய்விட்டது. சப்தமில்லாமல் இருந்தது நானிருந்த பெட்டி, இருவர் இருக்கைகளில் ஒருவரும், மூவர் இருக்கைகளில் இருவரும் அல்லது ஒருவராக அமர்ந்து ஆக மொத்தம் பெட்டி “நிரம்பி” வழிந்தது. பலர் அரைகுறை தூக்கத்திலிருந்தார்கள், சிலர் வழக்கம் போல அலைபேசிகளில் பாட்டு கேட்டவாறே திரையை தேய்த்துக்கொண்டிருந்தார்கள். தினசரியைப் பிரித்து பக்கத்துல உக்காந்திருக்கிறவங்க மூஞ்சியில உரசுற வழக்கம் இப்போவெல்லாம் குறைஞ்சிருச்சு. அலைபேசிகளுக்கு நன்றி.

சப்தமில்லாமல் இருந்த பெட்டியில், திடீரென ஒரு அலைபேசி மட்டும் உச்சஸ்தாயியில் அலறியது, ஏதோ பக்திப் பாட்டு போல, குஜராத்தியாய் இருக்கலாம். மூவர் அமரும் இருக்கையில் ஜன்னலோரம் அமர்ந்திருந்தார், வயது ஐம்பதுகளில் இருக்கும். நான் பல முறை கண்டிருக்கிறேன். குஜ்ஜூக்களில் பலர் காலை, மாலை என இரு வேளைகளிலும், கையில் பக்தி ஸ்லோகங்கள் கொண்ட காகிதங்களுடன் ஏறுவார்கள், பிறகு மனதுக்குள் படிக்க ஆரம்பிப்பார்கள். நாம் அவர்களைப் பார்த்து நாகரிகம் கருதி சிரித்து, வணக்கம் சொன்னால் லேசாக புன்னகைத்துவிட்டு மீண்டும் ஸ்லோகங்களுக்குள் போய்விடுவார்கள்.

வீறிட்டு பக்திப்பாட்டைப் பாடிக்கொண்டிருந்தது அவருடைய அலைபேசி. பலர் திடுக்கிட்டு விழித்து திரும்பிப் பார்த்தார்கள், குஜ்ஜூ அம்மணியோ சாவதனமாக, கீழேயிருந்த கைப்பையை எடுத்து, நடு இருக்கையில் பையை வைத்து ஜிப்பை மெதுவாக இழுக்க ஆரம்பித்தார். இப்போது பாட்டு இரண்டாம் முறை ஒலிக்க ஆரம்பித்தது. அமைதியாக பக்கத்தில் அமர்ந்திருந்தவர் மனசுக்குள் கடுப்பாக திரும்பி அந்த குஜ்ஜூ அம்மணியைப் பார்த்தார். கு.அம்மணியோ யாரையும் கண்டுக்காமல் கைப்பையிலிருந்த உள் ஜிப்பை திறக்க ஆரம்பித்தார், நான்காம் முறை பாட ஆரம்பித்தது.. இப்போது அதிக சப்தமாக இருந்தது, பெட்டியிலிருந்த அனைவருமே தூக்கம் கலைத்திருந்தார்கள். அதுக்குள்ளிருந்த அலைபேசியை மெதுவாக எடுத்து..... எடுத்து .. எடுத்து .. 

அருகிலிருந்த அப்பிரயாணிக்கோ தாங்க முடியாத கோபம். அம்மணி, மெதுவாக திரையைப் பார்த்தார், எண் சரியாகத் தெரியவில்லை போலும்,  ஐந்தாம் முறையாக ஒலிக்க ஆரம்பித்தது பாடல்..கண்ணாடியைத் தேடி கைப்பையைப் பிரித்தார். அப்பாடா!!!! பக்திப் பாட்டு நின்றிருந்தது. கு.அம்மணி மெதுவாக கண்ணாடியை எடுத்த போது  அலைபேசி சப்தம் போடுவதை நிறுத்தியிருந்தது. ஃபோன் பண்ணினவங்களே கடுப்பாகி கட் பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.  அம்மணி அமைதியாக அலைபேசியில் வந்திருந்த எண்ணைப் பார்த்தார், பார்த்தவர் திடீரெனப் பதறினார், ஏதோ குஜராத்தியில் முனகினார்.இப்பொழுது அலைபேசி அலற ஆரம்பித்தது. அநேகமாக எல்லோரும் அந்தப் பெட்டியிலிருந்த அனைவருமே விழித்தாயிற்று,  ஆடி மாசத்துக்கு வைக்கும் மாரியம்மன் சவுண்ட் சிஸ்டம் கணக்காக  அலறியது அலைபேசி. பதறியபடி எடுத்த அம்மணி மெதுவாக பேச ஆரம்பித்தார், பேசினார். பேசினார்..கொஞ்சமே சப்தம் அதிகம் போட்டு பேசிவிட்டார் போல, ஒரு வெள்ளைக்கார அம்மணி எழுந்திருச்சி "பேசறதுன்னா உனக்கு மட்டும் பேசு, எங்களுக்கும் சேர்த்துப் பேசாதே” என்று சொல்ல, கு.அம்மணி சைகையாலே சரி சரி என்று சொல்லி பேசிக்கொண்டேயிருந்தார். சில நேரத்தில பக பகவென்று சிரித்தார்.  பொட்டி மனிதர்கள் இப்பொழுது பழகிப் போயிருந்தார்கள், அம்மணி சிரித்தால் பொட்டியே சேர்ந்து சிரித்து ஆரவாரம் செய்தது. சொச்சோ என்றால், 10 பேராவது சொச்சோ என்றார்கள். மொழிதான் தெரியவில்லையோ தவிர அனைத்து மக்களும் அவர் உணர்வை பிரதிபலித்தார்கள். இறங்க வேண்டிய இடம் வந்ததும், சிலர் சிரித்தபடியே இறங்கிப் போனார்கள், சிலர் முனுமுனுத்தபடி...

இவ்வாறாக ஒவ்வொரு நாளும் தூக்கம் போயிருது என்பதுதான் அந்த கு. அம்மணியின் பக்கத்து இருக்கையில் உக்காந்திருந்த ஆளுக்குக் கவலை.. 

பின் குறிப்பு: இப்போ முதல் பத்தி படிங்க 

Monday, May 4, 2015

குழந்தைகளுக்கு உகந்ததா தமிழ் சினிமா?

"உங்களுக்குப் பிடிச்ச தமிழ்ப் பாடல் ஒன்றைச் சொல்லுங்கள் பார்ப்போம்"
அன்றைய தமிழ் வகுப்பில் நான் கேட்ட கேள்வி அது.  முதல் வகுப்பு என்றால் 7  அல்லது 8 வயது குழந்தைகள் படிப்பார்கள். ஒவ்வொருவராக சொல்ல ஆரம்பித்தார்கள்.

“வாட் அ கர்வாடு"
“கண்டாங்கி கண்டாங்கி"
“டார்லிங் டம்பக்கு"
“செல்ஃபி புள்ள"
“டங்கா மாரி ஊதாரி"
“டண்டணக்கா டண்டணக்கா” - என்ற வரிசையில்

“நான் தமிழ் சினிமா பாடல்கள் பார்க்க மாட்டேன்"

“ஏன்?” - இது நான்


பாடல்கள் எல்லாம் ரொம்ப விரசமாக இருக்கும், நடிகர்களின் நடன அசைவுகள் எதுவுமே குழந்தைங்க பார்க்கிற மாதிரி இருக்காது. முக்கால் வாசி பாடல்கள் குழந்தைகளுக்கானவை அல்ல” - என்று சொல்லி முடித்தாள் அந்தப் பெண். கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்கையில் சிக்ஸருக்கு அடிப்பாரே தோனி,  அந்த மாதிரி அடித்து முடித்தாள் அந்தச் சிறுமி.  


    வ்வளவு பெரிய உண்மை அது. யோசிச்சிப் பார்த்தீங்கன்னா அமெரிக்காவில் குழந்தைகளுக்கான படங்கள் என்று வரும். 95% குழந்தைகள் படத்தைப் பார்த்திடறாங்க. பெரும்பான்மை அரங்கிலும், சிலர் வட்டுக்கள் வாயிலாகவும், இன்னும் சொற்பமானவர்கள் வேறு வழியாகவும். வயது வாரியாக நாடகங்கள், கார்ட்டூன் தொடர்கள் என்று எல்லாம் உண்டு. அவர்களுக்கான தனி சேனல்களே 10+ தேறும். PG 14 or R rated திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் எதுவுமே அந்தந்த வயது வரும் வரை குழந்தைகள் பார்ப்பதில்லை, பார்க்கவும் அவர்கள் விரும்புவதில்லை.  இது அமெரிக்கா போன்ற நாடுகளில் வளர்ப்பு முறை மற்றும் சூழல்களால் என்றே நினைக்கிறேன். அவர்களின் நண்பர்களைச் சந்திக்கையில் அந்தந்த வயது வாரியாக படங்கள் பார்ப்பதாக அமையும். 9+ மட்டுமே நடிகர்கள் நடித்த படத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். அதற்கு குறைவான வயது உடையவர்கள் பார்ப்பது என்னமோ பெரும்பாலும் கார்ட்டூன் சினிமா, தொடர்களாத்தான் இருக்கும்.  

நமது தமிழ் சினிமா குழந்தைகளுக்கானதா? 99.9% சத்தியமாக இல்லை. பசங்க, கோலி சோடா, பூவரசம் பீப்பீ போன்ற சிறுவர்களுக்கான படங்களில் கூட நிறைய வரம்பு மீறல்கள் இருக்கும். குழந்தைகளுக்கு என்று எடுக்கப்படும் படங்களே கம்மி இதுல அவுங்களுக்கான விசயங்கள் கம்மின்னா எப்படிங்க?

நம்ம மக்கள் தமிழ் சினிமாவை எப்படி எடுக்கிறார்கள் ? உண்மையாகப் பார்த்தால் தமிழ் சினிமா வளர்ந்தவர்களுக்காக மட்டுமே எடுக்கப்படுகிறது.  சினிமாவுக்காக எழுதப்படும் திரைக்கதையில் எப்படி ஆரம்பிக்கிறோம்? "எல்லாத் தரப்பும் மக்களும் பார்க்கனும், எல்லாருக்கும் ரீச் ஆகனும்" அது யார் இந்த எல்லாரும்? கல்லூரி மாணவர்கள், 20-30 வயதினர், அதுவும் குறிப்பாக ஆண்கள். இவர்கள்தான் சினிமாவை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள். 30-50 வயது மக்கள், ஆண் பெண் என இருபாலினரும். வயது வந்தோருக்கான காட்சிகள் வைத்திருந்தாலே குழந்தைகள் பார்க்க முடியாது. குழந்தைகளுக்கான படத்தை பெரியவர்கள் பார்க்கலாம். ஆனா பெரியவர்களுக்காக எடுக்கப்படும் படங்கள் எப்படி குழந்தைகள் பார்க்க முடியும்? அதில் வரும், கவர்ச்சி நடனங்கள், இரட்டை அர்த்த வசனங்கள், ஆடை குறைந்து விரசமாக நடந்து வரும் நடிகைகள் என்று எதுவுமே குழந்தைகளுக்கான காட்சிகள் கிடையாது. நமது திரைப்படங்கள் பெரும்பாலும் காதல் இல்லாமல் வருவதில்லை. அப்புறம் எந்த லட்சணத்தில் குழந்தைகளை சினிமாவுக்கு அழைத்துச் செல்வதாம்?

இப்படி பெரியவர்களுக்கான திரைப்படத்தை எடுத்துவிட்டு, குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே அத்தனை விரசங்களையும், மனதில் பதிய விட்டு விட்டு பிறகு அவர்கள் பதின்ம வயதில் என்னத்தை அறுவடை செய்வதாம்? தமிழ் சினிமா என்பதே வணிக நோக்கில் எடுக்கப்படும் படங்கள்தாம் என்பது இங்கே தெரியவில்லையா? அதற்கு சமூக நலன் எல்லாம் கொஞ்சமும் இல்லை. அதுவுமில்லாமல், சிறுவர்களுக்காக எடுக்கப்படும் படங்களை பெரியவர்கள் பார்ப்பதே இல்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியே வந்தாலும் நம்ம மக்கள் எத்தனை படத்தை ஓட விட்டிருக்கிறார்கள். எத்தனை வந்திருக்கிறது என்பது ஒரு புறம் கேள்வி என்றாலும். மணிரத்னம் எடுத்த அஞ்சலி பரவாயில்லை என்கிற ரகத்தில் ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் அவர்கள் படத்தில் குழந்தைகள் எல்லாம் வயதுக்கு மீறி பேசும், கதாநாயகிகள்தான் குழந்தைகள் மாதிரி பேசுவார்கள்.


இந்த 5 வருடங்களாத்தான் சோட்டா பீம் வருகிறது, தவிர தமிழில் வரும் 2 சேனல்களை குழந்தைகள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதுவும் மொழி பெயர்ப்பில் காது கொடுத்து கேட்க முடியாதளவுக்கு லோக்கல் மொழி என்கிற பெயரில் கொடுமையான மொழியில் வருகிறது. ஒரு நாள் நான் சுட்டி டிவியை எல்லாம் பாதியில் நிறுத்துவதற்கான காரணம் அதன் வசனங்கள் மட்டுமே.


ஒரு புறம் குழந்தைகளை நல்ல வாசகர்களாக, அதாவது புத்தகங்கள் படிக்க வைப்பதில்லை, அது சரி, பெரியவர்களுக்கு அந்தப் பழக்கம் இருந்தால் தானே? பெரியவர்கள் எல்லாம் சினிமா பார்க்கிறார்கள், சினிமா நிகழ்ச்சிகளை கண்டு களிக்கிறார்கள், நடிக நடிகைகளின் கிசுகிசுக்களைப் பேசுகிறார்கள் என்று பெரியவர்களின் பொழுது போக்கு சினிமாவைச் சுற்றியே இருக்கிறது. அப்படி இருக்கும் சினிமா குழந்தைகளுக்கானது அல்ல என்று தெரிந்தும் குழந்தைகளையும் பார்க்க வைக்கிறார்கள். அதில் வரும் அனைத்து கெட்டப்பழங்களையும் மறைமுகமாக பழக வைக்கிறார்கள். பதின்ம வயதில் கற்பழிக்கும் எண்ணத்தை வளர்த்தது யார்? இளம் வயதில் போதைக்கு அடிமையாகும் பழக்கத்தை எங்கிருந்து ஆரம்பிக்கிறார்கள்?


இப்பொழுது அந்தச் சிறுமி சொன்ன விசயத்திற்கே வருகிறேன். சிறுவ சிறுமியர்களுக்கென இல்லாத ஒரு சினிமாவை ஏன் அவர்கள் பார்க்க வேண்டும்? பார்க்க வைக்க வேண்டும்? பார்த்து கெட்டுப் போக வேண்டும்.

Monday, April 13, 2015

சில்லுகளாய் அவள் சில்மிஷத்துடன் நான்

நீ அழகாய் பிறந்தவள், வசதியானவள், வசீகரமானவள்
பளிச்சிடும் புன்னகையுடன் பிரம்மாண்டமாய் உருவெடுத்தவள்
முதலில் உன்னை நான் படங்களில் கண்டேன், சிலாகித்தேன்
ஓரே முறை உன்னை நேரில் கண்டேன்: உற்று நோக்கினேன்
உனக்கது தெரிய வாய்ப்பில்லை, நம்மூரில் இப்படி ஒரு அழகியென
மனதுள் ஒரு பேரானந்தத்துடன் உன்னைக் கடந்து போனேன்.

பிறகு உன்னைப் பற்றி வந்த செய்தியெல்லாம் சோகமானவை
உன் மீது வைத்திருந்த அபிப்பிராயத்தயெல்லாம் மாற்றியமைத்தவை
அழகியென ஆர்ப்பரித்த உள்ளங்களெல்லாம் 
காரணமறியாமல் உன்னை ஏச ஆரம்பித்த காலம்
நீ மட்டும் உன்னை மாற்றி கொள்ளவேயில்லை
மீண்டும் மீண்டும் உன் புத்தியைக் காட்டிக்கொண்டே இருந்தாய். யிற்று இன்னும் இரண்டு நாட்கள்தாம்,
உன்னைக் காண எனக்கும் அமைந்திருக்கிறது ஒரு வாய்ப்பு
மனதில் திடம் வை, உன்னை அணைக்க  நான் ஆசைப்படவில்லை
கண்கள் நோக்குவோம், அழகில் கரைவோம்,
எல்லை தாண்ட நினையாமல் பயணம் தொடர்வோம்,
தொட்டுவிடாமல் இருவருமே கடந்துவிடுவோம்
அது உனக்கும் நல்லது எனக்கும் நல்லது.


மனதில் உறுதி பூண், உடலில் திடம் கொள்,
கட்டவிழும் ஆசையை உள்மனதில் வைத்து பூட்டு,
வந்து போவோரிடம் சொல்
“இவன் நல்லவன் இவனிடம் நான் என்னை இழக்க மாட்டேன்,
சில்லுகளாய் உடைய மாட்டேன்" என்று சொல்,
திரும்ப திரும்ப சொல்,
அழுத்திச் சொல்,
உன்மீது நம்பிக்கை வரும்வரை சொல்,
நான் வந்து திரும்பும் வரை உன்னைக் காத்துக்கொள்,
அதன் பிறகும் தீர்க்கமாய் இரு,
உன்னை ஏசும் ஊர் உலகத்துக்கு நீ உடையாதவள் என்று உரக்கச் சொல்
என்னைக் காணாமல் என்றும் உடைந்து விட மாட்டேன் என்று சத்தியம் செய்
என் இனிய அழகிய
சென்னை விமான நிலைய கூரையே!!!

Tuesday, December 23, 2014

என் வீட்டிற்குள் துப்பாக்கி எப்படி வந்தது?

ழக்கம் போல அன்றும் 5:45க்கு அலைபேசி அலாரத்துடன்தான் ஆரம்பித்தது. நமக்கு வழக்கமாக ஆரம்பிக்கும் நாட்கள் எல்லாம், எல்லோருக்கும் வழக்கமாக ஆரம்பிப்பதில்லை என்பதுதான் உலக நியதி. இதமான குருவி கீச்சுகளுடன் எழுந்த நாட்கள் எல்லாம் போய்விட்டது. குய்யோ முய்யோ என்ற அலாரம் போடும் சப்தத்துடந்தான் தினமும் விடுகிறது. வேகமான ஓட்டங்கள், ஆச்சுது, 20 நிமிடங்களில்  கிளம்பியாயிற்று  15 நிமிட   ங்கள் இருக்கிறது, சற்றே செய்திகள் பார்க்கலாம் என்று அலைபேசி பார்த்தால், கொட்டை எழுத்தில் மின்னிற்று “பாகிஸ்தான் பள்ளியில் துப்பாக்கி சூடு, 98 குழந்தைகள் பலி”, சற்றே கலங்கிப் போனேன் நான், அலைபேசியை தவிர்த்துவிட்டு, தொலைக்காட்சியை உயிர்ப்பித்தேன்,  அனைத்து செய்தி  சானல்களிலும் இந்தச்சம்பவமே இடம் பிடித்திருந்தது. பலி எண்ணிக்கை மட்டும் உயர்ந்துகொண்டே சென்றது.

10 நிமிடங்கள் கடந்திருந்த போது, அந்தக் குழந்தை இடத்தில் என் மகனும், மகளும் இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. இறந்து போன அந்த செல்வங்களுக்கும் என்னைப் போன்ற பெற்றோர்கள் இருப்பார்கள் இல்லையா? அவர்களும் காலையில் டாட்டா காட்டி முத்தம் குடுத்தே அனுப்பி வைத்திருப்பார்கள், மாலையில் குழந்தை வீடு திரும்புவார். அவருக்குப் பிடித்ததைச் செய்து கொடுக்கலாம் என்று எத்தனை தாய்மார்கள் கனவு கண்டிருப்பர்.

அமெரிக்க-கனேட்டிக்கட் நியூட்டனில் பள்ளியில் ஒரு துப்பாக்கி சூடு நடந்த போது இதே போன்ற ஒரு தவிப்பும் சோகமும் என்னைச் சூழ்ந்துகொண்டது ஞாபகத்திற்கு வந்தது. படுக்கையறைக்கு வந்திருந்தேன். இந்தக் கவலை ஏதுமில்லாமல் மகன் காலைக் குறுக்கி தூங்கிக்கொண்டிருந்தார். கவலை ஏதுமில்லாத நேரம் ஆழ்ந்துறங்கும் நேரம்தானே. மகளைப் பார்த்தேன், முகத்தில் பேரமைதி.

வீட்டை விட்டு கிளம்பினால் திரும்ப வீடு திரும்புவோம் என்ற உத்தரவு ஏதுமில்லாத அளவுக்கு தீவிரவாதத்தை வளர்த்ததில் என் பங்கு என்ன?  ஒரு நடுத்தர குடும்பஸ்தனை பாதிக்குமளவுக்கு தீவிரவாதம் ஏன் தன் கரங்களை நீட்டியிருக்கிறது? தினமும் காலையில் கிளம்பினால் மாலை உயிருடன் வீடு வந்து சேர்ந்துவிடுவதே மிகப்பெரிய சாதனையாக மாற்றியது யார்?

தினமும் மகனுக்கும் மகளுக்கும் அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்துவிடாத மாதிரி மென்மையாக முத்தமிட்டுவிட்டு வேலைக்கு கிளம்புவது வழக்கம். அன்று நானிட்ட முத்தத்தில் சற்றே அழுத்தம் இருந்தது.

தொடர்புடைய சுட்டிகள் :Wednesday, December 17, 2014

லிங்கா - இது விமர்சனம் அல்ல

லிங்கா பார்த்தாச்சு. பயப்படாதீங்க, இந்தப் பதிவு இந்தப் படத்தைப் பத்தின விமர்சனம் மட்டுமல்ல.

லிங்கா வெற்றியா தோல்வியா என்பதைப்பற்றி நான் எழுத வரவேயில்லை. காரணம் முதல் வாரயிறுதியைத் தாண்டிவிட்டால் எல்லாருக்குமே அது தெரிந்திருக்கும். 


பலவீனம்: தர்மதுரையில், இதே துள்ளல் இருக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கு அனைத்தையும் தந்துவிட்டு சத்திரத்தில் தங்கியிருப்பார். அதே கதை மீண்டும், அங்கே படிப்பு, வசதி இத்யாதிகள், இங்கே அணை, ராஜா, அரண்மனை, கோயில். Very Predictable Scenes, அதுதான் பிரச்சினையே. அடுத்து வரும் காட்சிகளை அம்சமாக சொல்ல முடிகிறது. கோச்சடையானில் இருந்த திருப்பு முனைகளில் ஒன்றுகூட இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே. பறப்பது எல்லாம் ஓவரோ ஓவரோ, சிரிப்பை அடக்க முடியவில்லை. ரஜினியிஸம் ஓரளவுக்கு சரி, ஆனா இவ்வளவு ரொம்பவே அதிகம் KSR

படத்தோட மிகப்பெரிய பலங்கள் 6

  1. ரஜினி 
  2. ரஜினி
  3. ரஜினி
  4. படமாக்கப்பட்ட விதம்/தயாரிப்பு நிர்வாகம்- சாபு சிரில்
  5. ராண்டி - ஒளிப்பதிவு
  6. ரஜினி

சாபு சிரில் என்கிறவரை கலை என்கிற வட்டத்தை விட்டு தயாரிப்பு நிர்வாகம் என்று மாற்றியதில்தான் இருக்கிறது படத்தின் பிரம்மாண்டத்திற்கான வெற்றி. அதுவும் பல இடங்கள்  GreenMat தொழில்நுட்பம்தான். ஆனால் அது தெரியாமல் செய்த விதத்தில் KSRன் திறமை தெரிகிறது. Double Tick. இந்த வருடத்தின் தேசிய விருது கண்டிப்பாகக் கிடைக்கும். Advance Wishes Sabu Cyril

அடுத்து ஒளிப்பதிவு. அபாரம் அபாரம், அந்த புகையிரத சண்டையாகட்டும், தாத்தா ரஜினியின் பகுதிகளாகட்டும், அனைத்து காட்சிகளிலும் இவரின் உழைப்பு தெரிகிறது.

ரஜினி: ரஜினி ரஜினி ரஜினி.. படத்தின் அத்துணை பலமும் இவர் மீதுதான். இளமை கொண்டாட்டம், துள்ளுகிறார்.

மற்றபடி லிங்கா எனக்குப் பிடித்திருந்தது.

இனி, என் சொந்தப் பிரச்சினை. லிங்கா படம் வெளியாகும் என்று தெரிந்தவுடனேயே எல்லோரையும் போல் நானும் இணையம் சென்றேன், விலை பார்த்தால் $25ஆம், சரி இது சிறப்பு காட்சிகளுக்கு என்றுதானே வாரயிறுதிக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்றால் $20ஆம். சரி, விலை குறையட்டும் என்று விட்டுவிட்டேன். இப்படி விட்ட நண்பர்கள் ஏராளம். ஆங்கில படத்திற்கு $12 என்று இருக்கையில் நீங்க வைக்கிற $25 மதிப்பு என்ன நியாயம்? இதுல  விமர்சனம் செய்யக்கூடாது, MEME செய்யக்கூடாதுன்னு சொல்ற யோக்கியதை உங்களுக்கு கொஞ்சமாச்சும் இருக்கா?

இனிமே $20 என்று வைத்தால் ரசிகர்கள் வேண்டுமானால் ஒரு காட்சிக்கு மட்டும் வருவார்கள், என்னைப் போன்ற சினிமா பார்க்கும் பொதுப்பார்வையாளனுக்கு விலைதான் முதலில் தெரியும். குடும்பத்தார் அனைவரையும் அழைத்துக்கொண்டு வர வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். (கணவன், மனைவி, இரு குழந்தைகள் என்றே வைத்துக்கொள்வோம், $25*2+$20*2 +பாப்கார்ன், குளிர்பானம் என்று வைத்தாலே $100 பக்கம் வருகிறது. இந்த லட்சணத்தில் 20 மைலாவது ஓட்டி வர வேண்டும், போக வர 1 மணி நேரம், படம் பார்க்க 3 மணி நேரம், கிளம்ப 1 மணி நேரம் என்று வைத்தாலும் 5 மணி நேரம் செலவு செய்ய வேண்டும். ஒரு குடும்பஸ்தன் இனி சினிமா பார்க்க இத்துணை சிரமங்கள் இருக்கின்றன. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் $20 வைத்து மொக்கைப் படம் தந்தால் கண்டிப்பாக அடுத்து வரும் படங்களுக்கு ஒருவரும் திரையரங்கம் வர மாட்டார்கள்.

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர்/மலேசியா, இந்தியா, அரபு நாடுகள், இங்கிலாந்து என்று அனைவரும் பார்த்த பின்னால்தான் அமெரிக்காவில் வெளியாகிறது. இதில் விமர்சனங்களைப் பார்த்த பின்னரே இங்கேயிருந்து திரையரங்கம் செல்கிறோம். அதுவுமில்லாமல் அனைத்து விதமான போங்காட்டமாக பார்க்கும் வசதிகள் இருந்தும் திரையரங்கம் செல்லும் ரசிகர்களை உங்கள் விலையை வைத்து திசை திருப்பாதீர்கள்.

லிங்கா தனியாகத்தான் சென்று பார்த்தேன், அதுவும் ஒரு வார நாளில் , என்னையும் தவிர்த்து திரையரங்கத்தில் 4 பேர் இருந்தனர்.