Tuesday, February 28, 2006

கள்வனின் காதலி

நாம எப்பவுமே விகடன் விமரசனம், சன் டிவி டாப் 10 பார்த்துதான் படம் பார்க்கப் போவேங்க.(சொந்த புத்தியெல்லாம் சினிமாக்கு ஒத்துவராது).

விகடனில் போன வாரம் வெளியான இந்தப் படத்திப்பற்றி விமர்சனம் படிசேங்க, அதுல இப்படி எழுதியிருந்தாங்க "சின்ன பெரிய பட்ஜெட்களில் தரமான திரைப்படஙளை உருவாக்கி, தமிழ் திரையுலகத்தின் மரியாதையை மேலும் உயர்ங்களுக்கு கொண்டுசெல்ல, நல்ல பல படைப்பாளிள் முனைப்போடு பாடுப்பட்டு வரும் இந்த நேரத்தில்..."கள்வனின் காதலி" அவகாரமான திருஷ்டிப்பொட்டு." விகடன்ல மார்க் கூட போடலைன்னா பார்த்துக்கோங்களேன்.ஆனா சன் டிவி டாப் 10ல இதுக்கு முதலிடம் இடம் கொடுத்து இருந்தாங்க. என்னாங்க அநியாயம் இது. எததாங்க நம்புறது இப்போ.

Friday, February 24, 2006

Willys ஜீப்

12வது மார்க் பார்த்துட்டு அவ்வளவுதான் நம்ம பையனுக்கு அறிவுன்னு அப்படின்னு எங்கப்பாரு முடிவு பண்ணியிருப்பார். ஆனா நம்ம ஒண்ணு கண்டுபுடிச்சோம் "படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமேயில்லை" (நல்லா படிக்காத எல்லாரும் சொல்றதுதான்).

இருக்கிற மாடுகளை வித்துட்டு ஒரு 10 இல்லைன்னா 20 டில்லி மாடு வாங்கி, கிணத்துல இருந்து 100 அடி தள்ளி ஒரு பெரிய கொட்டாய் போட்டு, மாட்டு பண்ணை வெக்கலாம்னு முடிவு இருந்துச்சு. அப்படியே ஊட்டி-கூடலூர் போய் ஒரு Willys ஜீப் வாங்கி பின்னாடி இருக்கிற சீட்டையெல்லாம் கழட்டி தூக்கிகடாசிட்டு, செமத்தியா ஆல்டர் பண்ணி வெச்சா பால் சொசைட்டில பால் கொண்டு போய் ஊத்த உதவும், சமயத்துல ஊர் சுத்தவும் உபயோகப்படும்(ஒரு மைனர் கணக்கா சுத்தலாம்), ஊர்லையும் நமக்கு ஒரு கெத்தாவும் இருக்கும், அப்படியே வாழ்க்கையில செட்டிலாகலாம்ன்னு ஒரு பெரிய கனவு கண்டேங்க. அதுவுமில்லாம ரிலீசன்னைக்கே கூட்டாளிங்க எல்லாரையும் அள்ளிப் போட்டுகிட்டு சினிமா பார்க்க போயிடலாம் பாருங்க.இதைப் போயி அப்பாருகிட்ட நேரா சொல்ல தைரியமில்லை. அப்போ அவர் என்ன படிக்க வைக்கணும்னு கனவு கண்டுட்டு இருந்தகாலம். எப்படியோ அம்மாகிட்ட கெஞ்சி கூத்தாடி அப்பாருகிட்ட சொல்ல வைச்சுட்டேன். அப்பாரு என் முதுகில டின் கட்டப் போறார்ன்னு நெனச்சேன். ஆனா அவரோ "பையன் நல்லா படிக்கிற பையந்தான், கூட்டாளிங்கதான் சரியில்லை. இம்ப்ரூவ்மென்ட் எழுதட்டும், நல்ல மார்க் வரலைன்னா அவரு இஷ்டப்படியே அடுத்த வருஷம் செஞ்சிரலாம். ஒரு டிகிரி கூட வாங்கலைன்னா ஊர்ல மதிக்க மாட்டாங்க. பார்த்து படிக்க சொல்லு" அப்படின்னு அம்மாகிட்ட சொல்லிட்டு போய்ட்டார்.
அப்புறமா அந்த ஜீப் வாங்க காலம் அமையவேயில்லை. காலேஜ் முடிச்சப்புறம் புதுசா ஸ்ப்லென்டர் வாங்கி ஒரு மாசம் ஊர்க்கடைல, கிரிக்கெட் விளையாடன்னு சுத்தினது அப்பாருக்கு ஒரு பெருமைதான். 2 வருஷட்துக்கு முன்னாடி அல்டோ வாங்க போனபோது கூட Willys ஜீப் வாங்கலாம்னு அம்மாகிட்ட சொல்லப் போக ஒரே ஒரு மொறப்புதான், அப்புறம் என்ன பண்ண.

இப்பவும் Willys ஜீப்பை எங்க பார்தாலும் வாங்கலாமான்னு தோணும். ஆனா....இன்னும் Willys ஜீப் எனக்கு ஒரு நிறைவேறாக் கனவாகவே இருக்கு.

Thursday, February 23, 2006

3*(13*4)+6=0

சீட்டாட்டம், நான் 11வது படிக்கும் போது அறையாண்டு லீவுல ஒரு நல்ல ஞாயித்துக்கிழமை சாயங்காலமா எங்கப்பாரு எனக்கு பொறுமையா சொல்லிக்கொடுத்தார். அவர் சொல்லித்தரலைன்னா நான் வேற எங்காவது, வேற யாரோ எனக்கு சொல்லித்தந்து கத்துக்கபோறேன்னு எங்கப்பாருக்கே தெரியும்.

ஞாயித்துக்கிழமை கிரிக்கெட் விளையாடபோனாக்கூட கட்டோடதான் போவோமுங்க. கிரிக்கெட் முடிஞ்சா சீட்டுல களம் இறங்கிருவோம். கல்யாணம்னா மாப்பிள்ளைப்பையன் எங்களுக்கு ஒண்ணும் பெரிசா செய்யவேண்டியதில்லை. சீட்டுதான் மொதல்ல, அப்புறம்தான் மீதியெல்லாம். சீட்டு விளையாட இடம் போட்டுத்தருவது, கட்டு ஏற்பாடு எல்லாம் கல்யாணப்பயனோட வேலைங்க. இல்லைன்னா கல்யாணத்துக்கு வரவேமாட்டோம்னு நேராவே சொல்லிருவோம். நாங்க இல்லாம தாலி கட்டிருவானா மாப்பிள்ளை? மண்டபத்தையே இரண்டு பண்ணிரமாட்டோம்? அதே பொண்ணுக்கு கல்யாணம்னாக்கா பொண்ணுக்கு தம்பியோ, அண்ணனோ இந்த ஏற்பட்டெல்லாம் செய்வாங்க.


எங்க ஊர்ல, ராத்திரி கல்யாணத்துக்கு மாப்பிள்ள வீட்லையும், பொண்ணுவீட்லையும் மதியமே மண்டபத்துக்கு போய்ருவாங்க, அப்பவே நம்ம பட்டாளமும் கூடவே கெளம்பிரும். போன உடனே சாப்டுருவோம், கை கழுவும்போதே குசு குசுன்னு பேச்சு ஆரம்பிக்கும். பேச்சு முடியறதுக்குள்ள கட்டு கைக்கு வந்துரனும், இல்லாட்டி பொண்ணுகிட்ட ஏதாவது சொல்லி போட்டு கொடுத்துருவோம்னு மிரட்டறதும் உண்டு. கைக்கு கட்டு வந்தா மறு நிமிஷம் எஸ்கேப்தான். எதாவது நல்ல ரூமா தேடி செட்டில் ஆகிருவோம். விளையாட தெரியாத பசங்கதான் அன்னிக்கு பூரா ரூம்பாய்ஸ். டீ, காபியெல்லாம் சமையல் கட்டிலிருந்து நேரா கொண்டுவந்டுவாங்க. அக்கம் பக்கம் ஊர்ல எல்லாம் இதே கதைதான்.
ரம்மி, 3 சீட்டுதான் விளையாடுவோம். அதுவும் 2, 3 குரூப்பா பிரிஞ்சு விளையாடுவோம். சின்ன பசங்க எல்லாம் ஒரு கேங், பெரியவங்க எல்லாம் ஒரு கேங். ராத்திரி சாப்பாடு ஆச்சுன்னா, குரூப் திரும்பியும் சேர்ந்துரும். அப்புறம் தான் ஆட்டம் கலை கட்ட ஆரம்பிக்கும்.

ரம்மி விளையாடுற இடம் எப்பவுமே அமைதியாவே இருக்கும், கூட்டமும் கம்மியா இருக்கும்(நம்ம இடமும் இதுதான்). நம்மதான் ஆரம்பகாலத்திலிருந்தே பாயின்ட் எழுதற ஆள். 3 சீட்டு நடக்கிற இடம் சந்தகடை மாதிரி சத்தமாவே இருக்கும். சண்டையெல்லாம் நடக்காது. நடந்ததுமில்லை, ஏன்னா விளையாடுற எல்லாமே மாமன், மச்சானா தான் இருப்பாங்க. முன்ன பின்ன ஊர்ல மூஞ்சில முழிக்கனுமில்ல?

ஒரு 3 மணி இல்லைன்னா 4 மணிக்கெல்லாம் பாதி பேர் கெளம்பிருவாங்க, பணம் எல்லாம் காலியாகியிருக்கும். அவுங்க எல்லாம் வீட்டு போய்ட்டு காலையில முஹூர்த்தத்துக்கு டீசன்ட்டா வந்துருவாங்க. மீதியெல்லாரும் செம வேகத்துல இருப்பாங்க. மாபிள்ள தாலி கட்டுறது கூட தெரியாம விளையாண்டதும் உண்டு. மொய் வைக்க கொண்டு போன பணமெல்லாம் சீட்டுல விட்டுட்டு மாபிள்ளைக்கிட்டையே பஸ்ஸுக்கு காசு வாங்கிட்டு வரதெல்லாம் ரொம்ப சகஜம்.

gain, loss எல்லாம் அடுத்த நாள்ல மறந்துருவோம். மறுபடி அடுத்த கல்யாணம் வரைக்கும் காத்திருப்போம். எல்லாம் ஒரு நாள் கூத்துதான்.


காலேஜ்க்கு சேர்ந்த புதுசுல நாம தான் ராஜா. இருந்த வித்தையெல்லாம் காட்டி சீனியர்களை எல்லாம் சீக்கிரம் நம்ம சைடுல இழுத்துட்டேன். பெரும்பாலும் சனி ஞாயிறு ஊருக்கு போயிருவேன், இல்லாட்டி வெள்ளிக்கிழமை ராத்திரியே ஆட்டம் ஆரம்பிச்சிரும். இரண்டு நாளும் சீட்டும் கையுமாத்தான் இருப்போம். காலேஜ் முடிஞ்ச சமயம் ஒரு தடவை 3 நாள் தொடர்ந்து விளையாடி இருக்கோம். குளியலாவது, ஒண்ணாவது விளையாட்டுதான். இன்னமும் நம்ம காலேஜ் கூட்டாளிங்க வந்தால் கட்டுதான் மொதல்ல.


அதென்ன 3*(13*4)+6=0 கேக்கறீங்களா? யாரவது சொன்னா ஒரு சீட்டு கட்டு parcella அனுப்பி வைக்கபடும்.

Tuesday, February 21, 2006

நாலு விஷயம் - சங்கிலிப்பதிவு

கொஞ்சம் வருஷத்துக்கு முன்னே பச்ச சேலை வாங்கினா அண்ணன் நல்ல இருப்பான்னு சொல்லி, ஜவுளி கடைக்காரங்க எல்லாம் விக்காத பழைய சேலையெல்லாத்தையும் பச்ச கலருக்கு மாத்தி வித்தாங்க. அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லைங்க.

கொங்கு ராசாவுக்கு நம்ம மேலே ஏதோ பிரியம் போல. ராசா கார் வாங்கிட்டு ட்ரீட் கொடுக்காம ஏமாத்திட்டாரேன்னு கோவத்துல இருந்தேன். ஏதோ புதுசா வலைப்பதிவுல ஆரம்பிச்சிருக்காங்க சங்கிலி தொடர்ன்னு (tag-மொழி பெயர்த்தவர் ராசா) அதுல நம்மை இழுத்துவிட்டுட்டார் பெருமைக்குரிய ராசா. கொஞ்சமாவது வேலை வெட்டி இருக்கிறவங்களுக்குதான் அது பொருந்தும், நமக்கு.. ஹி ஹி.

இந்த நைஸ் பண்ற வேலையெல்லாம் வேணாம் ராசு ட்ரீட்தான் வேணும்
(காதலிக்க நேரமில்லை - விஷ்வநாதன்! வேலை வேணும், பாட்டு மாதிரி படிச்சுக்கோங்க)
கொங்கு ராசு! ட்ரீட்டு வேணும்
கொங்கு ராசு! ட்ரீட்டு வேணும்
கொங்கு ராசு! ட்ரீட்டு வேணும்

நாலு பேர்கிட்ட பழகி நல்லது கெட்டது தெரிஞ்சுக்கோ- இது என் அப்பா சொன்னது. நல்லது மட்டுமா கிடைக்குது? சரி விஷயத்துக்கு வருவோம்.

Four jobs I have had:

1.விவசாயம்
2.மேய்த்தல் (மனுஷப் பயலுகளை)
3.வளர்த்தல் (1 மாதமே ஆன என் செல்ல மகனை)
4.ஊர் சுத்தல் (ஊர் சுத்தின்னும் நமக்கு ஒரு பட்ட பெயர் இருக்கு)

Four movies I would watch over and over again:
1. சதிலீலாவதி
2. மைக்கேல் மதன காம ராஜன்
3. சிங்காரவேலன்
4. சர்வர் சுந்தரம்

Four places I have lived(for years):
1. டெல்லி
2. பெங்களூர்
2. லண்டன் (அள்ளி விடு)
4. செல்லிகாடு (என் தோட்டம்)
(தலைவர் மாதிரி இமையமலைகூட போலாம்னு ஆசைதான்)

Four TV shows I love to watch:

1.விஜய் டீ.வி. - லொள்ளு சபா..
2.ஜெயா டீ.வி காமெடி பஜார்
3.போகோ. ஜஸ்ட் ஃபார் ஃகேக்ஸ்
4. விஜய் டீ.வி.- முன்னே கடவுள் பாதி மிருகம் பாதி, இப்போ இல்லை (ஆள் மாறினதுக்கப்புறம் பார்க்கிறதை நிறுத்திட்டேன்)

Four places I have been on vacation:
1.சிவசமுத்திரம், சோம்நாத்பூர், ஹலபீடு(கர்நாடகா)
2.பாரிஸ்(தேன்நிலவு)
3.லண்டன்
4.நைனித்தால், டெல்லி, ஜெய்பூர், உதைப்பூர்,

Four of my favourite foods:
இதுல நானும் ராசாக்கட்சி இருந்தாலும்.
1. கோபி மஞ்சூரியன்
2. முள்ளங்கி சாம்பார்
3. அவித்த கடலை
4. சோளக்கருது

Four places I'd rather be now:
1. ஊர்ல பாட்மின்டன் விளையாட போயிருக்கலாம்
2. ஊர்ல கிரிக்கெட் விளையாட போயிருக்கலாம்
3. வேம்பநாடு
4. கொழிஞ்சாம்பாறை

Four sites I visit daily:
சைட்-- நானா.. ச்சே..சே. .. கல்யாணம் ஆகிடுச்சு ஓ இது வலைத்தளம் பத்தின கேள்வியா..
1. தமிழ்மணம்
2. தேன் கூடு
3. கூகிள்
4. யாஹூ


Four bloggers I am tagging*:

1. கைபுள்ள
2. நாட்டாமை
3. தாணு
4. டோண்டு
எப்படியோ 4 பேரை இழுத்துவிட்டாச்சு, இனி அவுங்கபாடு

Friday, February 17, 2006

எய்ட்ஸ் பெண்கள்!


நேத்து 10 மணிக்கு இனி அச்சமில்லை அச்சமில்லை(புது Version, அதான் அச்சமில்லை அச்சமில்லை- இனி அச்சமில்லை அச்சமில்லை யா மாறியிருக்கு).எய்ட்ஸ்னால பாதிக்கப்பட்டவங்களை பேட்டி எடுத்தாங்க லஷ்மியம்மா. ஏதோ எய்ட்ஸப்பத்தி மொக்க போட போறாங்கன்னு நினைச்சேன். மேட்டரே வேற.

கல்யாணம் ஆகி புருஷன் மூலமா எய்ட்ஸ் பரவின இரண்டு பெண்களின் பேட்டி அது. அவர்களின் கண்களில் அச்சமில்லை, கூச்சமில்லை. அவர்களது கடமையை நிறைவேற்றுவதில் கண்ணாக இருந்தனர். கடமையை செய்வோம், வேறு எதுவுமில்லை என்பது மாதிரி இருந்தது அது. வாழும் காலம் குறைக்கபட்டது தெரிந்தும், அவைகளின் தெளிவு எனக்குள் ஏதோ உணர்த்தியது. "நாங்க வாழ்றவரக்கும் உழைப்போம் பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டுவருவோம்" அப்படின்னாங்க.

நம்ம மனுஷபயலுக மட்டும் ஏன் இப்படி பொய் புரட்டோட திரியனும், நாமும் போறவங்கதானே, என்ன கொஞ்சம் லேட் ஆகும். ஒரு வேளை எல்லார்க்கும் மேல போற தேதி தெரிஞ்சா ஒழுக்கமாயிருப்பானுங்களோ?

Wednesday, February 15, 2006

போலி தத்துவம்- 2

1. அம்மா அடிச்சா வலிக்கும், போலிஸ் அடிச்சா வலிக்கும், ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?

2.பஸ்ல, கண்டக்டர் தூங்கினா யாரும் டிக்கெட் எடுக்க மாட்டாங்க, ஆனா டிரைவர் தூங்கினா எல்லோரும் டிக்கெட் எடுத்துடுவாங்க

3.ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம், காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம், ஆன பிளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?

4.பால்கோவா பாலில் இருந்து பண்ணலாம், ஆனா ரசகுல்லாவை ரசத்தில் இருந்து பண்ண முடியுமா?

5.கம்ப்யூட்டர் டீச்சர கணக்கு பண்ணலாம், ஆனா கணக்கு டீச்சர .கம்ப்யூட்டர் பண்ண முடியுமா?

6.பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை பாஸ்போர்ட்ல ஒட்டலாம், ஆனா ஸ்டாம்ப் சைஸ் போட்டோவை ஸ்டாம்ப்ல ஒட்ட முடியுமா?

7.ஓட்ட பந்தயத்துல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும், பரிசு கைக்குதான் கிடைக்கும்

8. என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும், அதால நன்றின்னு சொல்ல முடியாது.

9. என்னதான் அஹிம்சாவாதியா இருந்தலும், சப்பாதிய சுட்டு தான் சாப்பிடனும்.

10. நீ எவ்ளோ பெரிய வீரனா இருந்தலும், குளிர் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது.

11. காசு இருந்தா கால் டாக்ஸி, காசு இல்லைன்னா கால்தான் டாக்ஸி.

12. எவ்ளோ குட்டையா இருந்தாலும் ஹை ஹீல்ஸ் போட்டு உயரமா ஆகலாம், ஆனா எவ்ளோ உயரமா இருந்தலும் லோ ஹீல்ஸ் போட்டு குட்டையா ஆக முடியது.

13. பேன்ட் போட்டு முட்டி போடலாம், ஆனா முட்டி போட்டு பேன்ட் போட முடியாது.

நன்றி - டொச்சு & டுபுக்கு

Wednesday, February 8, 2006

10:10 காலை

நேற்று, சரியாக 10:10 காலை, எல்லா இந்தியனும் சச்சின், ஷேவாக்கின் ரன்னுக்கு ஏங்கிய நேரத்தில், மும்பை பங்கு சந்தை 10000 குறியீட்டை தாண்டியது. கடந்த டிச. 9 பங்கு சந்தையில் ஒரு முக்கியமான நாள் என்றால், நேற்று தீபாவளித் திருநாள். இதற்கு காரணங்கள் பல இருந்தாலும் அந்நிய முதலீடுதான் முக்கிய பங்கு வகிக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன் ஆயிரம் என்றிருந்த குறியீட்டு எண் அபார வளர்ச்சிக்கு பங்கு சந்தையின் தொழில்நுட்பமும் ஒரு காரணமே.

செபி என்ற கண்காணிப்பு ஆணையமும், ரிசர்வ் வங்கியும், மத்திய அமைச்சகமும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கையில் இந்த வளர்ச்சி ஏற்ப்பட்டு இருப்பது ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட முடிகிறது, என்றாலும் மனதின் ஓரம் ஒரு பயம் தான்.
சத்யராஜ் சொன்ன மாதிரி "சந்தோஷமாவும் இருந்துக்கோ, சாக்கிரதாவும் இருந்துக்கோ"..

Wednesday, February 1, 2006

ஆனந்தக் கண்ணீர்

அலறியது என்னுடைய தொலைபேசி
அழைத்தது எனது அருமை
துணைவி-என்னவென வினவ
வலி ஆரம்பித்ததாக முனகியது
அவளது குரல்-வாழ்க செல் போன்
என வாழ்த்தி ஆயத்தமானேன்
மாமனார் ஊரிலிருக்கும் மருத்துவமனைக்கு
6 மணி நேர வண்டிப் பயணம்
மனம் போகும் வேகத்தில் செல்லவில்லை
நான் சென்ற வண்டி, கண்களில் நீரோட
மனம் சொல்லியது "இன்னும் அறிவியல் வளரவில்லை"

மனதில் லேசான பயம், இடையிடையே
துணைவியின் நலம் விசாரித்ததில்
நலமேயென பதிலினால் சிறு ஆறுதல்.
இருப்பினும் அவளது சிரம் காண உந்துதல்;
தடுமாற்றத்துடன் மருத்துவமனையின்
வாசற்படி மிதித்தேன்: என்னை
எதிர்பார்த்தபடி பெற்றோர், நண்பர்கள்
மற்றும் உறவினர்கள்-யாரும்
தெரியவில்லை கண்ணுக்கு

துணைவி இருந்த அறைக்கு
அழைத்து செல்லப்பட்டேன் - மனதிற்குள்
வேண்டினேன் "அவளுக்கு ஆறுதல் சொல்ல
என் மனதிற்கு திடம் கொடு ஆண்டவா"

"இன்னும் 3 மணி நேரத்தில் பிரசவம்
ஆகிவிடும்" செவிலி கூறியது மட்டும்
செவியில் விழுந்தது - அறையில் அவள்
தணித்து படுத்திருக்க அவள் கண்களில்
வலியும், வழியும் கண்ணீரும் - மனம் பத பதைக்க
அறிவு அடித்தது மண்டையில்
"ஆறுதல் மட்டுமே சொல்லு"
வாஞ்சையுடன் கைதொட்டு ஆறுதல் சொல்ல
எல்லாம் கிடைத்தது போல
மனம் தேறினாள்
வலி இருந்தும்.

செவிலியின் பணி தொடர வெளியே
தள்ளப்பட்டேன், மனம் உள்ளேயும்
உடல் வெளியேயும் என 5 நிமிடம்;
மீண்டும் 15 நிமிட ஆறுதல்
5 நிமிடம் வெளியே என 3 மணி நேரம்.

மருத்துவர் வர புரிந்தது எனக்கு;
இன்னும் சில நிமிடமே
துணைவியோ பல்லைக்கடித்து
வலியை மறைத்தது கண்களில் தெரிந்தது,
மனதுல் பயமும் கண்களின் ஓரம் நீருமாய்
வெளியே வந்தேன் - மணி 9:30 இரவு

சுற்று பார்த்தேன், மருத்துவமனை
நிறைந்து எங்கெங்கும் உறவினர்கள்
ஆரவாரத்திலிருந்து சற்று தள்ளி இருந்த
பிரசவ அறை பூட்டப்பட,
வாயிலின் ஓரத்தில் நாற்காலி எனக்காக,
நிசப்தம்; சுற்றி யாரும் இல்லை;
பிரசவ அறையிலிருந்து
சிறு ஒலியாவது கேட்குமா என
ஏங்கியது மனம்

அக்கணமே கேட்டது
துணைவியின் அலறல்
என் ஆணவம், கெளரவம் தொலைத்து
உற்றார் உறவினர் நினைப்பேயில்லாமல்
கண்ணீர் பெருக்கெடுத்தது
ஆறுதல் கூற அருகில் யாருமில்லை
இருப்பினும் கண்ணீர் துடைக்க தோணவில்லை
பத்து நிமிடம் விட்டு விட்டு
அலறல் சப்தம் - நின்றது ஒரு கணத்தில்
கழன்று விழுவது போல
கணத்தது என் இதயம்.

நிமிர்ந்து பார்த்தால் தோல் தட்டி
சுற்றி ஒரு கூட்டம் - வீறிட்டு அழும்
பிஞ்சின் சப்தம்; இது சந்தோஷமா?
வலி குறைந்த திருப்தியா?
எதுவும் தோணவில்லை
கை குலுக்கும் வாழ்த்துக்களுக்கு இடையில்
முகம் கழுவி திரும்பினேன் - சிறு சல சலப்பு

செவிலியின் கையில் புது மொட்டு
அப்பா ஜாடையா? அம்மா ஜாடைய?
பட்டிமன்றம் நடத்தியது மகளிர் கூட்டம்
கூட்டத்திற்கு நடுவே என் பிஞ்சு - துணைவியின்
முகம் காண ஏக்கம்
இடையே என் வாரிசையும்;
பாட்டிக்கு என் ஞாபகம் - கூட்டம் விலக்கி
காட்டினார் "ஆனந்தம், பேரானந்தம்"

சில கணம்
என்னிடம் இல்லை என் மனம்
தனியறைக்கு துணைவி தள்ளி வரப்பட்டாள்
என்றுமே நான் காணாத வாடி, வதங்கிய சிரம்;
பாதம் தொட்டு மனதில் நன்றி சொன்னேன்
அதுதானே என்னால் முடியும்
என் வாரிசை பத்து மாதம் சுமந்து
பத்திய சோறு தின்று பெற்று எடுத்தவளுக்கு
ஜென்மம் பல எடுத்து நன்றி சொன்னாலும் தகும்!

மார்கழி திங்கள் கடைசி தினம்
ஒரு ஆண் வாரிசுக்கு தகப்பன்
ஸ்தானத்திற்கு உயர்ந்தேன்
ஆயிற்று அரை மாதம் கடந்தும்
மறக்க முடியவில்லை அக்கணத்தினை -
மறக்கவே முடியாது என்றும்
பொறுப்புகள் பல கூடினாலும் மனதில்
ஆயிரமாயிரம் மத்தாப்புக்கள் - எனக்காகவே
எங்கோ ஒலித்தது ஒரு பாடல்
"எனக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்"

மானாவாரி

Social கவிதை Movies பதிவர் வட்டம் 365-12 Personal twitter கிராமம் சமூகம் துணுக்ஸ் TamilmaNam Star Movie Review TeaKadaiBench USA காதல் Video Post சமுதாயம் சிபஎபா நிகழ்வுகள் பதிவுலகம் Copy-Paste Quiz அனுபவம் புலம்பல் Vivaji Updates ஈழம் News Short Film ஏரும் ஊரும் கதை ஜல்லி புனைவு மீள்பதிவு Politics பண்ணையம் Comedy cinema music அரசியல் சிறுகதை தொடர்கதை நகைச்சுவை Photo technology சங்கிலி பெற்றோர் Photos song webs இளையராஜா தமிழ் விவசாயம் Information KB Story in blogging world. experience இயற்கை நினைவுகள் ரஜினி வியாபாரம் BlogOgraphy Interview NJ NYC Songs review Tamil Kid kerala manoj paramahamsa tamil train அலுவலகம் இசை திரைப்படம் பத்திரிக்கைகள் பொங்கல் மொக்கை 18+ Adverstisement Buzz Computing Controversial Doctor Drama GVM IR Indli Job Interview Jokes Language Music Review Oscars Sevai Magik Tamil Blog awards Wish WorldFilm Xmas aggregator book review cooking corruption cricket kids nri rumour songs. sujatha அப்பா அப்பாட்டக்கர் எதிர்கவிதை கடிஜோக்ஸ் கற்பனை கலவரம் கலைஞர் குத்துப் பாட்டு குறள் சினிமா சுட்டது சுயம் திரைத்துறை நட்பு படிச்சது பயணம் பாரதி மீட்டரு/பீட்டரு விமானம் விவாஜியிஸம்