Monday, July 31, 2006

கன்னத்தில முத்தமிட்டால்...

கன்னத்தில முத்தமிட்டால் படத்த சின்னத்திரையில் கண்டு சிறிலங்கவை நினைச்சு மனம் வெதும்பி, பிறகு ஏதாவது எழுத நினைச்சு படத்துல "எப்பமா இந்த போர் முடியும்? இங்கே நிம்மதியா இருப்பாங்க" அப்படின்னு கீர்த்தனா கேள்விக்கு ஒன்னுமே சொல்லாத போற நந்திதா தாஸ் மாதிரி நானும்....

கேள்வி : ஏன் இந்த மக்களால மட்டும் நிம்மதியா இருக்க முடியல?

பதில் : மார்ட்டர்ஸ்.கண்ணி வெடி, பாம் செய்றவங்களுக்கு எங்காவது ஒரு யுத்தம் நீடிப்பதில் ஒரு வியாபார நோக்கு உள்ளது. முன்னேறிய நாடுகள்.. யுத்தத்தை நிறுத்திட்டாங்க. முன்னேறாத நாடுகளை அவுங்க தயாரிக்கிற ஆயுந்தங்களை பரிசோதிக்கும் இடமாக மாத்திட்டாங்க. உலகத்திலேயே சமாதானத்தை விரும்புற நாடு ஜப்பான், ஆனா அவுங்கதான் துப்பாக்கி அதிமாக தயாரிக்கிறாங்க. இதுக்கு என்னதான் முடிவு? எல்லா ஆயுதங்களையும் மூட்ட கட்டி தூக்கி கடல்ல கொண்டு போயி போட்டாதான், இதுக்கு முடிவு.
போன தலை முறை ஆரம்பிச்ச இந்த யுத்தத்தை இந்த தலைமுறையிலாவது ஒரு முடிவுக்கு கொண்டுவருவாங்களா?

கண்ணீருடன்
விவசாயி

Friday, July 28, 2006

தேன்கூடு-மரணம்-முன்னுரை

வரப்புல ஒரு கவிதையை எழுதிவெச்சு இருந்தேங்க. அப்போதான் "கைப்பு" மோகன் கூப்பிட்டு "கவிதை நல்லா இருக்கு இளா, என்ன சொல்றதுன்னே தெரியல. போட்டியில இது கண்டிப்பா பரிசு வாங்கும்" அப்படின்னு சொன்னாரு. தமிழ்மணம், தேன்கூடு எதையுமே என்னுடைய இடத்துல பார்க்க முடியாது (இன்னும்தான்). அதனால மரணம் போட்டியைப் பத்தி அந்த சமயம் எனக்கு தெரியாதுங்க.

அப்போதான் ஜூன் மாத போட்டி ஞாபகம் வந்துச்சு (வராதே பின்னே, நம்ம மக்களான இளவஞ்சி, ராசா கலந்துகிட்டு பரிசு வாங்கினவங்க ஆச்சே). தேன்கூடு போட்டி பத்தின விவரம் தெரிஞ்சிக்கிட்ட போதுதான் வாத்தியாரு எவ்வளவு பெரிய ஆளுன்னு தெரிஞ்சது (வாத்தியாரு'ங்கிறது இளவஞ்சியின் செல்ல பேருங்க). பின்ன "மரணம்"ல தலைப்பு சொல்லியிருக்காரு. சோகம், எழவு, ரத்தம் அப்படின்னு எதையுமே எழுத கூடாதுன்னு முடிவு பண்ணிட்டுதான் அந்த கவிதைய மாத்தினேன். ஆச்சு கவிதை தலைப்புக்கு ஏத்தமாதிரி சாராம்சம் குறையாமல் மாத்தி போட்டியில கலந்துகிட்டேன்.


நம்ம சக விவசாயி "கொங்கு" ராசா கூப்பிட்டு "இளா என்ன சொல்றதுன்னே தெரியல, ஆனா கவிதை நல்லா இருக்கு" அப்படின்னு சொன்னாரு. அப்பதான் ஒரு பெருமூச்சு விட்டேன். அப்படியே 3 நாள் தோட்டத்துல வேலை அதிகமா இருந்ததினால வலைப் பக்கமா வர முடியல. அப்புறம், பின்னூட்ட மட்டுறத்தல் பக்கம் பார்த்தா, நிறைய பேரு பின்னூட்டம் போட்டு இருந்தது தெரிஞ்சது. அட நம்ம கவிதையை கூட ரசிச்சு, பாராட்டிதான் பின்னூட்ட போட்டு இருக்காங்கன்னு நினைச்சு படிச்சு பார்த்தா தலை சுத்திருச்சு. போட்ட பின்னூட்டம் எல்லாத்திலேயும் ஒரே மாதிரி "என்ன சொல்றதுன்னு தெரியல" அப்படின்னே எழுதியிருந்தாங்க. சரி, நம்ம கவிதைக்கு அவ்ளோதான் மதிப்பு அப்படின்னு நினைச்சுகிட்டேன்.

அப்போதான் ஒரு யோசனை வந்துச்சு. அனுசுயாகிட்ட கேப்போம், அவுங்க ஒரு நடுவர் மாதிரின்னு நினைச்சு "என்னங்க சொல்ல ஒண்ணுமேயில்லயா கவிதையில" அப்படின்னு ஒரு தனி மடல்ல கேட்க அவுங்க போட்ட பதில் தான் என்னை சமாதானப் படுத்திச்சு. இதோ அவுங்க போட்ட பதில்
"இளா, நீங்க வேற நிஜமா சூப்பராயிருக்குங்க. இந்த கவிதைய படிச்சுட்டு யாரும் கருத்து சொல்ல முடியாது. அனுபவிக்கனும். ஒவ்வொரு வரியும் அனுபவிக்கறா மாதிரி எழுதியிருக்கீங்க. படிச்சவுடனே அவங்கவங்க நினைவுகள்ள முழுகற மாதிரியிருக்கு அப்புறம் எப்டி கருத்த சொல்லறது. ஆட்டோக்ராப் மாதிரி அவங்கவங்க வாழ்க்கை நினைவுகள்ள முழ்கடிக்குது. இதபோயி யாராவது நல்லாயில்லனு சொல்ல முடியுமா? நிஜமா வெற்றி பெறும் கவிதையிது. அப்புறம் நம்ம கிட்டயும் கருத்து கேட்டதுக்கு நன்றிங்கோ :)". நன்றிங்க அனுசுயா


"கொடுமையிலே பெரிய கொடுமை இளமையில் வறுமை, ஆனா அதை விட கொடுமை முதுமையில் தனிமை". இதை நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட ஒரு பாடம். முதுமையில் தனிமை தவிர்க்க முடியாதது. ஆனா அதை மறந்து வாழ என்ன பண்றதுன்னு பெரியவர் ஒரு முறை என்கிட்ட கேட்டபோது, ஒண்ணும் பேசாம எழுந்திருச்சு வந்துட்டேன். இந்த கேள்வி ரொம்ப நாள் பாரமா இருந்துச்சு. "முதுமையில் தனிமை, மரணத்துக்கே முன்னே வரும் ஒரு பெரிய மரணம்"ன்னு அப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன். அதன் பிரதிபலிப்பே இந்த கவிதை. ஒரு முற்றுபுள்ளி மட்டுமே நம் வாழ்க்கையை முடிவு செய்துவிட கூடாது. நாம் அனுபவித்து, ரசித்த வாழ்வின் 50 வருடம் ஒருவரின் மரணத்திற்கு பிறகு வெறுமையாய் ஆகிவிட்டால், நாம் வாழ்ந்த முற்பகுதி வீண் என்று அர்த்தமாகிவிடாதா? வாழ்வில் சுகம், துக்கம் இரண்டும் உண்டு. மனிதனின் பிற்பகுதியில் அவன் கண்ட சுகங்கள் நிலைக்க சுகத்தை அசை போட்டால், வெறுமையும் இல்லை தற்கொலையும் இல்லை. நான் சொல்ல வந்த கருத்து இதுதான் "முற்பகுதி சுகத்தினை அசை போடு, பிற்பகுதியும் சுகமாக இருக்கும்.

நம்ம வாழ்க்கை, பாசம், நேசம், காதல், காமம், குடும்பம், வாரிசு அப்படிங்கிற எல்லாம் நிறைஞ்ச ஒண்ணு. அதை போலதான் எனது கவிதையிலும் சொல்லியிருக்கேன்.

அந்த பெரியவர் சொல்ற மாதிரியே கவிதை எழுதினேன். எழுதி முடிச்ச உடனே அவர்கிட்ட படிச்சு காண்பிச்ச போது எல்லோரையும் போல அவரும் ஒண்ணும் சொல்லல. கண்ணீர் மட்டும் பதிலா வந்துச்சு. எனக்கு மனசுல ஒரு கனம், அதையும் மீறி கவிதையில ஏதோ சொல்லியிருக்கோம்ன்னு ஒரு திருப்தி.




இந்தக் கவிதை ஜூலை மாத தேன்கூடு-தமிழ்ஓவியம் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது இன்னும் மகிழ்ச்சியே - படிக்க - ரசிக்க- சொடுக்கவும்

நன்றி!

மரணம்!

சிலருக்கு சோகத்தையும்,
பலருக்கு வெறுமையும் தரும்,
எனக்கோ அந்த மரணம்
ஆறுதல் தந்து இருக்கிறது.

தலைப்பிட்ட வாத்தியாருக்கும்,
இந்த இடத்தை அடைய
வழிவிட்ட அனைவருக்கும் நன்றி!

தளம் அமைத்த
தேன்கூட்டிற்கும்,
பரிசளிக்கும்
தமிழோவியத்துக்கும் நன்றி!

வாக்கு தந்து ஏமாற்றும்
அரசியல்வியாதி போலல்லாமல்
நான் கேட்காமலே
வாக்களித்து எனக்கும்
ஒரு இடம் கிடைக்க செய்த
அத்துனை மக்களுக்கும்
என் நன்றி!


இதன் முன்னுரை

வாக்களித்த அந்த 30 பேருக்கும் என் இதயபூர்வமான நன்றிங்க!

Wednesday, July 19, 2006

தடையாவது, வெங்காயமாவது

யாரு தடை செஞ்சா என்னா இது கில்லி மாதிரி வேலை செய்யும்.
http://www.pkblogs.com

Monday, July 17, 2006

தேங்காய் சுடுற நோன்பி

இன்னைக்கு ஆடி-1.

அதாவது பாரதப் போர் ஆரம்பிச்ச நாள். நிறைய அக்கப்போரும் இருக்குங்க. புருஷன்மாருங்க எல்லாரும் பர்ஸ கெட்டியா புடிச்சுக்கனும் இல்லைன்னா கவுத்திருவாங்க இல்லே. பின்ன நிமிஷத்துக்கு ஒரு தரம் டி.வில ஆடித்தள்ளுபடி விளம்பரம். "எடுத்துக்கோ, எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில எடுத்துக்கோ"ங்கைறாங்க. அப்புறம் வுட்டுக்காறம்மாங்கல்லாம் என்ன பண்ணுவாங்க. அதுவுமில்லாம ஆடி மாசம்'ன்னா புருஷன், பொஞ்சாதிங்களை பிரிச்சு வேற வெச்சுருவாங்கலாமில்லை. இதையெல்லாம் பார்த்தா ஆடி மாசம் ஒரு பெரிய வில்லத்தனமான் மாசம்'ன்னு தான் நமக்கு தோணுதுங்க.

சரி, ஆடி-1 என்ன விஷேசம் தெரியுங்களா? தேங்காய் சுடுறதுதான். அட அடுத்தவங்க காட்டுல இருந்து இல்லீங்க. நம்ம தோட்டத்து தேங்காயதாங்க. பள்ளிகூடம் போகுறப்போ எல்லாம் பசங்களும், பொண்ணுங்களும் பள்ளிகூடத்துலயே தேங்காய் சுடுவோம். அது ஒரு கனாக்காலம். ஹ்ம்ம். சனிக்கிழமையே எல்லா கூட்டாளிங்களுக்கு சொல்லிவிட்டோம். திங்கள் காலையில தேங்காய் சுடறதா. இப்ப பசங்க கழுதமாதிரி ஆகி, தொப்பைய வெச்சுக்கிட்டு வந்துட்டாங்க. கையில ஒண்ணு, ரெண்டுன்னு குழந்தைங்க வேற. என்ன பண்ண காலம் வேகமா உருண்டு ஓடுது.

அட, இத எப்படி சொய்யறது சொல்லிறேங்க. அநேகமா, யாரும் சொல்லாத சமையல் குறிப்பு இது, அதனால குறிச்சு வெச்சுக்குங்க. நல்லா முத்தின தேங்காய், சோளம், ஒரு 10 கிராம், கம்பு ஒரு 10 கிராம், வெல்லம், எள்ளு ஒரு 10 கிராம். சுடுறதுக்கு குச்சி + எரிக்க சுள்ளி. தேங்காய நல்ல மட்ட உரிச்சு, குடுமி எடுத்துடனும். தேங்காய்க்கு புள்ளி மாதிரி 3 வடு இருக்கும். அதுல ஒண்ண மட்டும் ஓட்ட போட்டு பாதி தண்ணியை எடுத்துரனும். அப்புறமா, எள்ளு, கம்பு, சோளம், வெல்லம் எல்லாத்தையும் திணிச்சு, ஒரு பெரிய குச்சியில சொருகிட்டு சுடனும். அந்த குச்சி ஒரு 5 அடியாவது இருக்கனும், அப்போதான் தீ சுடாது. அப்படியே தேங்காய் சுடும்போது எவனாவது எகத்தாளம் பேசினா அந்த குச்சியாலையே ஒரு போடு போடலாம் பாருங்க.

Camp Fire மாதிரி ஒரு நெருப்பு மூட்டி எல்லாரும் உக்காந்து சுட வேண்டியதுதான். தேங்காய் நல்லா வெந்த பிறகு வெடிக்கும், எடுத்து உடச்சு திங்கவேண்டியதுதான். என்னா ருசி தெரியுங்களா? அம்புட்டுதான் தேங்காய் சுடுறது. சுடும்போதுதான் ஊர் கதையெல்லாம் பேசுவோம். எவனாவது கடுப்பு ஆகி சுட்டுகிட்டு தேங்காயால இருக்கிற அடிப்பான், அதுவும் தனி கலாட்டா. இதெல்லாம் நகரத்து பக்கம் இருக்குமா? தெரிஞ்சா சொல்லுங்க

Tuesday, July 11, 2006

மீள்பதிவு

ஒருத்தர் போட்ட பதிவுக்கு இன்னொருத்தர் மீள்பதிவு போட்டு இருக்காங்களா?

இல்லைன்னா, விவசாயிதான் முதல்'ன்னு வரலாறு சொல்லட்டும்.

அது சொன்னா சொல்லிட்டு போகுது, என்ன விஷயமுன்னு யாருங்க அது சொல்றது?


கொங்கு ராசாவோட பதிவுக்குதான் இங்க மீள்பதிவு. அதனால ராசாவோட பதிவ முதல்ல படிச்சுட்டு வந்துருங்க.அப்படியே சொடுக்கி பாருங்க

#
#
#
#
#
#
#
#
#
வந்தாச்சா. இனிமே படம் போட்டு கதை சொல்றதுதான்.

இந்தியன் - லஞ்சம் வாங்குறவங்களை கொலை செஞ்சாரு.





அந்நியன் - அலட்சியம் செய்றவங்களை கொலை செஞ்சாரு.




சந்திரமுகி - மனசுல இருக்கிற பேயை கொலை செஞ்சாரு.




மன்மதன் - துரோகம் செய்றவங்களை கொலை செஞ்சாரு.


அஜித் - அவர் படங்களை பார்க்க வரவங்களை கொலை செஞ்சாரு.



நன்றி- ராசா & மயிலு அனுப்பிய பிரேம்.

Wednesday, July 5, 2006

காலதேவனை வேண்டியபடி

தேன்கூடு "மரணம்" போட்டிக்காகவும்

சிறாராக,
பள்ளி முடிந்து திரும்புகையில்
யார் முதலில்
நம் தெருமுனை தொடுவது
என்றொரு போட்டி,
கன மழை,
இருவரின் கையிலும் குடை,
ஆனாலும் நனைந்த படி
முதலில் தெருமுனை தொட்டேன்.

கண்ணீருடன் நீ
உன் வீடு சென்றாய்,
அன்று முதல் உன்னிடம்
தோற்க ஆரம்பித்தேன்.



தோற்ற என்னை
சில நேரங்களில்
எள்ளி நகையாண்டாலும்,
என்றுமே
ஜெயிக்க விட்டதில்லை
மழை நீரில்
நீ விட்ட கண்ணீர்.

நீ
பெரிய மனுஷியாகிவிட்ட
போது வெட்கப்பட்டதை
சேமித்து வைத்திருக்கிறேன்
அடுத்த ஜென்மத்திற்கும் சேர்த்து




நம் திருமணத்தன்று இரவு
யாருக்கும் தெரியாமல்
உன் அறையில்
நான் நுழைந்து முத்தமிட்டு,
முன் வைத்த
பந்தயத்தில் ஜெயித்தேன்,
உனக்கும் பிடிக்கும் என்பதால்!

திருமண நாள் அதிகாலை,
எல்லோரும் முழிக்கும் முன்
யாருக்கும் தெரியாமல்
நாம் இருவரும்
சமையல் அறையில்
முத்தத்துடன் காபி பருகியது
யாருக்கு தெரியும்?
அந்த காபியின்
கடைசி சொட்டு ருசி
இன்றுவரை
எங்கேயும் கிடைக்கவில்லை!

தாலி கட்டிய போது
ஏன் அழுதாய்
என்று கேட்டதற்கு
உதடு சுழித்து தெரியாதென்றாய்,
எனக்கு
பதில் கிடைக்காவிடினும்
நீ உதடு சுழித்தது
பிடித்துப் போனது




முதலிரவு அன்று
நமக்குள் ஓடிய
குதிரைகள் அடங்கிய பின்
நீ கொடுத்த முத்தம் சொன்னது
காதலையா காமத்தையா?

வியர்வை துடைத்து விட்ட போது
காதில் கேட்டாய்
"இன்னுமொருமுறை இந்த
வியர்வை வேண்டுமா
இல்லை நான் வேண்டுமா?"
எதை எடுப்பது, எதை விடுப்பது?

நமக்குள் கூடல்கள் அதிகம்,
ஊடல்களை விட!
மழலையின் புன்னகை பார்த்து
நாம் மறந்த ஊடல்கள்
அதை விட அதிகம்.




மகளை பள்ளிக்கு
அனுப்பிய அந்த
முதல் நாளில்,
சிரித்தபடி டாட்டா சொன்னது
என் செல்ல மகள்,
கண்ணீருடன் நீ,
எனக்குள் ஐயம்
இருவரில் யார் குழந்தை?

மகளுக்கு
முதலில் தாவணி அணிய
சொல்லித் தருகையில்,
நீ வெட்கப்பட்டதை பார்த்து
மகள் திட்டியதும்,
அதற்காக என்னிடம் நீ முறையிட்டபோது
நான் சிரித்ததையும்
நம் முற்றத்து விநாயகரைத்
தவிர வேறு யாருக்குத் தெரியும்?



செல்ல மகள் திருமணம்,
கண்ணீருடன் நான்,
விசும்பலுடன் நீ,
இவ்வளவு நாள் மகள்
அணைத்து உறங்கிய
டெடி கரடி
அனைத்தும் அன்றுதான்
தனிமையாய்!

பேரனுடன் கொஞ்சிய நாட்களில்
நாம் கண்ட பேரின்பம்
நாம் வணங்கிய
தெய்வங்கள் தந்ததில்ல!



என்னை விட்டு
நீ இறைவனிடம்
சென்ற பிறகும் பல
இரவுகள் இப்படித்தான்
இந்த கவிதைகளை
படித்து சுகம் காண்கிறேன்.
இன்னும் குறையவில்லை
நீ கொடுத்த சுகங்கள்!


இன்று
தனியறையில் நான்,
உன் நினைவுகளோடு
வாழ்ந்தபடி.
ஒரு முற்றுபுள்ளியா
நம் சுகதுக்கத்தை
முடிவு செய்யப்போகிறது?

என்னுள் இருக்கும்
இந்த நினைவுகளை
உனக்கு வந்த
மரணத்தால்
அழிக்கமுடியவில்லை.

உன்னிடம் வந்துவிட
காலதேவனை வேண்டியபடி
கண்ணீரையும்,
உன் நினைவுகளையும் சுமந்தபடி,
இன்னும் நான்!

Tuesday, July 4, 2006

மானூத்து மந்தையில



மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே
தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி - அவன்
தங்க கொலுசு கொண்டு தாராண்டி
சீரு சுமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

நாட்டுக்கோழி அடிச்சு நாக்குசொட்ட சமச்சி
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா
வெல்லக் கொடல் வலிச்சா வெல்லப்பூண்டு உரிச்சி
வெல்ல கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா
பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க
பிள்ளைக்கு தாய்ப்பாலத் தூக்கிக் குடுக்கச்சொல்லு
மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு


ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு
எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு
காராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன்
வெள்ளிச்சங்கு செஞ்சா வெளக்கி வெக்க வேணுமுன்னு
தஙத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்
பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க
ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு
மச்சான ஈரத்துணி கட்டி இருக்கச்சொல்லு

மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

கச்சேரி மச்சானுக்கு வாழ்த்துக்கள்

மானாவாரி

Social கவிதை Movies பதிவர் வட்டம் 365-12 Personal twitter கிராமம் சமூகம் துணுக்ஸ் TamilmaNam Star Movie Review TeaKadaiBench USA காதல் Video Post சமுதாயம் சிபஎபா நிகழ்வுகள் பதிவுலகம் Copy-Paste Quiz அனுபவம் புலம்பல் Vivaji Updates ஈழம் News Short Film ஏரும் ஊரும் கதை ஜல்லி புனைவு மீள்பதிவு Politics பண்ணையம் Comedy cinema music அரசியல் சிறுகதை தொடர்கதை நகைச்சுவை Photo technology சங்கிலி பெற்றோர் Photos song webs இளையராஜா தமிழ் விவசாயம் Information KB Story in blogging world. experience இயற்கை நினைவுகள் ரஜினி வியாபாரம் BlogOgraphy Interview NJ NYC Songs review Tamil Kid kerala manoj paramahamsa tamil train அலுவலகம் இசை திரைப்படம் பத்திரிக்கைகள் பொங்கல் மொக்கை 18+ Adverstisement Buzz Computing Controversial Doctor Drama GVM IR Indli Job Interview Jokes Language Music Review Oscars Sevai Magik Tamil Blog awards Wish WorldFilm Xmas aggregator book review cooking corruption cricket kids nri rumour songs. sujatha அப்பா அப்பாட்டக்கர் எதிர்கவிதை கடிஜோக்ஸ் கற்பனை கலவரம் கலைஞர் குத்துப் பாட்டு குறள் சினிமா சுட்டது சுயம் திரைத்துறை நட்பு படிச்சது பயணம் பாரதி மீட்டரு/பீட்டரு விமானம் விவாஜியிஸம்