Jingle Bells- ஜிங்கிள் பெல்ஸ்


ஜிங்கிள் பெல்ஸ்' என்ற பாடலை எழுதிய, ஜான் பியர்போன்ட் வாழ்க்கையில் தோல்வியடைந்தவராகவே இறந்தார். வாழ்நாள் முழுவதும் தொடர் தோல்விகள் மனதைக் காயப்படுத்த, 1866ல் தன் 81வது வயதில் வாஷிங்டனில் அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
அவரது வாழ்க்கை பிரகாசமாகவே ஆரம்பித்தது. புகழ்பெற்ற யேல் பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்றார். அவரது தாத்தா யேல் பல்கலைக் கழக ஸ்தாபகர்களில் ஒருவர். பியர்போன்ட், ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்தார்.

மாணவர்களை கண்டிக்காமல் தோழமையுடன் பழகியதால் ஆசிரியராக தோல்வியடைந்த அவர், சட்டத்துறையை நோக்கி பயிற்சிக்காக திரும்பினார். வழக்கறிஞராகவும் அவர் தோல்வியடைந்தார். கட்சிக்காரர்களிடம் தாராளமாக நடந்து கொண்டதுடன், அதிக சன்மானம் தரும் வழக்கைவிட நியாயமான வழக்கையே பெரிதும் விரும்பினார். அடுத்ததாக வியாபாரத் துறையை தேர்ந்தெடுத்தார். வியாபாரியாகவும் அவர் தோல்வியடைந்தார். லாபம் வரும் அளவு பொருட்களின் மீது விலை வைத்து விற்க முடியாததுடன், கடன்காரர்களிடமும் தாராளமாக நடந்து கொண்டார். இதனிடையே அவர் கவிதை எழுதினார். அவை வெளியான போதும் வாழ்க்கைக்குத் தேவையான அளவு அவர் ராயல்டி வாங்கவில்லை.
கவிஞராக அவர் தோல்வியடைந்தார். எனவே, ஒரு பாதிரியாராக முடிவெடுத்து ஹார்வர்ட் தெய்வீகப் பள்ளியில் சென்று படித்து, பாஸ்டன் நகர சர்ச்சில் பாதிரியாராக நியமனம் பெற்றார். மதுவிலக்கு ஆதரிப்பு மற்றும் அடிமைத்தனத்திற்கு எதிரான நிலை ஆகியவை செல்வாக்கு பெற்ற சபை உறுப்பினர்களின் பாதையில் அவரை குறுக்கிட வைத்ததால் தன் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். பாதிரியாராகவும் அவர் தோல்வியடைந்தார். அரசியலில் அவர் சற்று வித்தியாசமாக செயல்பட முடியுமென்று தோன்றியதால் மாஸாசூசெட்ஸ் மாநிலத்தின் கவர்னர் தேர்தலுக்கு நின்றார்; தோல்வியடைந்தார். சற்றும் சளைக்காத அவர், காங்கிரஸ் தேர்தலில் ப்ரீ சாயில் பார்ட்டி சார்பாக நின்றார்; அதிலும் தோற்றார். அரசியல்வாதியாக அவர் தோல்வியடைந்தார். அமெரிக்க உள்நாட்டுப் போர் அப்போது துவங்கியது. மாஸாசூசெட்ஸ் வாலண்டியர்களின் 22வது படைப்பிரிவில் மதகுருவாக தொண்டாற்ற முன்வந்தார். வேலை பளு, உடல் ஆரோக்கியத்தை பாதித்ததால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு அங்கிருந்து விலகினார். அப்போது அவருக்கு வயது 76.

* *

யாரோ ஒருவர் அவருக்கு வாஷிங்டன் நகர கருவூலத்துறை அலுவலகத்தில் கடைநிலை குமாஸ்தா வேலையைப் பெற்றுத் தந்தார். அவரது வாழ்க்கையின் கடைசி ஐந்து வருடங்களை சாதாரண பைலிங் குமாஸ்தாவாகக் கழித்தார். அந்த வேலையையும் அவர் நன்றாக செய்யவில்லை; ஏனென்றால், அவர் மனம் அதில் லயிக்கவில்லை.
ஜான் பியர்போன்ட் ஒரு தோல்வியாளராகவே இறந்தார். செய்யத் துணிந்த எந்த வேலையையும் அவர் திறம்பட முடிக்கவில்லை. மாஸா சூசெட்ஸ் மாநிலம் கேம்ப்ரிட்ஜ் நகர மவுன்ட் ஓபர்ன் சிமெட்ரியில் உள்ள அவரது சமாதியின் கல்வெட்டில் உள்ள வாசகம்: கவிஞர், சமயபோதகர், தத்துவஞானி, சமுதாயத் தொண்டர் என்று எழுதப்பட்டுள்ளது. இவ்வளவு காலத்திற்குப்பிறகு நாம் இப்போது உறுதியாகச் சொல்லலாம் - அவர் ஒரு தோல்வியாளர் இல்லை என்று. சமூக நீதிக்கான அவரது அர்ப்பணிப்பு, மனித சக்தியின் மீது அவரது அபார நம்பிக்கை - இவையெல்லாம் தோல்வியில்லை. எவையெல்லாம் தோல்வி என்று நினைத்தாரோ, அவையெல்லாம் இன்று வெற்றியாக மாறிவிட்டன. கல்வி சீர்திருத்தப்பட்டது, சட்ட நடைமுறைகள் எளிதாக்கப்பட்டன, கடன் சட்டங்கள் மாற்றப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக அடிமைத்தனம் அறவே ஒழிக்கப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் நாம் அவரது வெற்றியை கொண்டாடுகிறோம். நம்முடைய இதயத்திலும், நினைவிலும் அவருடைய நினைவுச்சின்னத்தை வாழ்நாள் முழுவதும் சுமக்கிறோம்.அது ஒரு பாடல் — அந்தப் பாடல் இயேசுவைப் பற்றியோ, தேவதைகளைப் பற்றியோ அல்லது சாண்டாகிளாஸைப் பற்றியோ பாடுவது அல்ல. பனிக் காலத்தில் குளிர்ந்த இருளில் பனிக்கட்டிகளின் மீது குதிரை ஒன்று இழுத்துச் செல்லும் ஸ்லெட்ஜ் வண்டியில் பறந்து செல்லும் சுகமான ஆனந்தத்தைப் பற்றி மிகச்சாதாரணமான, ஆனால் அற்புதமான பாடல், நண்பர்கள் சூழ, வழி நெடுக சிரித்துக் கொண்டு, பாடிக் கொண்டும் செல்லும் பாடல். அந்தப் பாடல்தான், "ஜிங்கில் பெல்ஸ்!' பனி பொழியும் குளிர்கால மாலைப்பொழுது ஒன்றில் ஜான் பியர் போன்ட் தன் குடும்பத்தினருக்காகவும், நண்பர்களுக்காகவும் சிறிய அன்பளிப்பாக சில கவிதை வரிகளை எழுதினார். அவ்வாறு அவர் எழுதி விட்டுச் சென்ற அந்தப் பாடல் கிறிஸ்துமஸிற்கு ஒரு நிரந்தரமான, மிகச்சிறந்த அன்பளிப்பானது. அதுதான், "ஜிங்கிள் பெல்ஸ்!' பாடல்


நன்றி: எங்கேயோ படிச்சு, சுட்டது. அவுங்களுக்கு நன்றி

Comments

 1. நல்ல தகவல்.. தோல்விகள் என்ற பெயரில் அவர் பெற்றது அனைத்தும் வெற்றி தான்...

  ReplyDelete
 2. எனக்கென்னவோ வாழற காலத்தில் பெரிதாக சந்தோஷமோ திருப்தியோ அடைய முடியாத பின் என்ன ஆனாலும் அது (அவரை பொறுத்த வரையில்) வெற்றியோ தோல்வியோ இல்லை தானேன்னு தோணுது.. எனக்கு தெரிந்து மரம் நடுவது மட்டும் தான் இருக்கும் காலத்தில் சந்தோஷம் தராத ஆனால் ஒரு பெருமிதமோ வெற்றியுணர்வோ தருகிற செயல்.

  ReplyDelete
 3. சமூகத்திற்கான ஒரு முன்னுதாரண மனிதன்.. நன்றிகள்..

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)

  ReplyDelete
 4. நன்றி வெறும்பய்.
  பொற்கொடி- நீங்களும் நம்ம கட்சிதான் போங்க. இருக்கும்போது சந்தோசமா இருக்கனும்
  நன்றி ம.தி. சுதா
  நன்றி மருத்துவரே

  ReplyDelete

Post a Comment

Popular Posts