'மாம்ஸ்' பாலபாரதி-1

கார்ட்டூனிஸ்ட் பாலா அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்திருந்தது. அவருடைய அனுமதியுடன், பா. க.ச மக்களுக்காக இங்கே பகிர்கிறேன். 


`பாலபாரதி’ என்ற அந்த மனிதனை நான் சந்தித்த அந்த தினம் என் வாழ்வை இப்படி திசை திருப்பிவிடும் என்று நான் அப்போது நினைத்திருக்க வில்லை.

அப்போது மும்பையில் `சார்ட்டர்ட் அக்கவுண்டனிடம்’ உதவியாளனாக வேலைப்பார்த்துக்கொண்டிருந்தேன். மும்பையிலிருந்து வெளிவந்த `மும்பை தமிழ் டைம்ஸ்’ நாளிதழில் கதைகள், கட்டுரைகள், அவற்றிற்கு நானே ஓவியங்கள் என்ற பெயரில் நான் செய்து கொண்டிருந்த காமெடிகளைப் பார்த்து பாலபாரதி கடுப்பாகியிருக்க வேண்டும். ஒரு நாள் எனது அலுவலக எண்ணை கண்டுபிடித்து பேசி ஒரு ஞாயிறன்று `பஞ்சாயத்துக்கு’ ஏற்பாடு செய்யப்பட்டது.

மாட்டுங்காவில் இருக்கும் மகேஸ்வரி பூங்கா தான் மீட்டிங்க் ஸ்பாட். அப்போதெல்லாம் எந்த அரசியல் பார்வையும் எனக்கு கிடையாது (இப்ப மட்டும் என்ன வாழுதாம்.. :)) . சுபா-வின் `நரேன் - வைஜெயந்தி’யிடமும், ராஜேஸ்குமாரின் `விவேக் - ரூபாலா’விடமும் கிறங்கிப்போய் கிடந்தேன். அந்த பாதிப்பில் இந்தியாவின் முப்படைகளில் ஏதாவது ஒன்றில் சேர்ந்து உயிரைக்கொடுத்தாவது இந்த தேசத்தை காப்பாற்றியாக( :)) வேண்டும் என்று படு கோயிந்தாக சுற்றிக்கொண்டிருந்த நாட்கள் அவை.மகேஸ்வரி பூங்கா வாசலில் காத்துக்கொண்டிருந்தேன். பாலபாரதி வந்தார். உடன் மதியழகன் சுப்பையா, நாசர் அலி, ராஜா முகமது, ராஜாசாமி என்று ஒரு படையும் வந்தது. . என்னை அடையாளம் கண்டவுடன் நீண்ட நாள் பழகிய நண்பனிடம் பேசுவது போல் தோள் மீது கை போட்டு ஒரு அணைப்புடன் பேச ஆரம்பித்தார்.
உயரமும், தாடியும் பார்க்க ஒரு நக்சலைட் ( எல்லாம் தமிழ் சினிமா பண்ற வேலை தான் ) போலிருந்தார். கூட ஒரு குருப்பு வேறயா.. எனக்கு கொஞ்சம் சந்தேகமும் கூட.. `ஒருவேள தீவிரவாத குருப்பா இருப்பானுவலோ..’ என்று முப்படை மூளை யோசித்தது.

``எல்லாரும் பாக்க தீவிரவாதிங்க மாதிரியே இருக்கீங்க” என்று அதை நேராக அவரிடம் சொல்லியும் விட்டேன்.. பூங்கா அதிர சிரித்தவர் அதன் பிறகு பேசப்பேச பிடித்துப்போனது. `உங்கள் ஜூனியர்’ மாதிரி நாவல்கள் படித்தவனுக்கு அப்போது அவர் பேசும் சித்தாந்த கருத்துகள் பெரிய புரட்சியாக தெரிந்தது.

ஓவியங்கள் என்ற பெயரில் நான் கிறுக்கியிருந்த நோட்டுப்புத்தகம் ஒன்றை கொண்டுப் போயிருந்தேன். பார்த்துவிட்டு ``உனக்கு ஓவியமே வரையத்தெரியலையே’’ என்றவரை குழப்பத்துடன் பார்த்தேன். ``நீ பேசாம கார்ட்டூனிஸ்ட் ஆகிரு. உன் கோடு அதுக்கு தான் செட் ஆகுது. அரசியல் கார்ட்டூன் போடுற ஆளுக இன்னைக்கு இந்தியால ரொம்ப குறைவு. நீ முயற்சி செஞ்சேனா கார்ட்டூனிஸ்ட் ஆகிரலாம்’’ என்று பாலபாரதி சொல்ல சொல்ல நான் கார்ட்டூனிஸ்ட் ஆகிக்கொண்டிருந்தேன்.
அன்று இரவு தூங்குவதற்கு முன் முடிவு செய்தேன் ``நாம கார்ட்டூனிஸ்ட் ஆகுறோம்டா..” என்று.

அதன் பிறகு எல்லோருமே என் கண்ணுக்கு கார்ட்டூன்களாகவே தெரிய ஆரம்பித்தார்கள். விசுவின் `அரட்டை அரங்கம்’ பார்க்கும் கோயிந்தாக இருந்தவன் எப்போதும் செய்தி சேனல் பார்க்க ஆரம்பித்தேன். வரைய வரைய கோடுகள் கொஞ்சம் வசப்படுவது போலிருந்தது. ஆனால் பாலபாரதியும் மதியழகன் சுப்பையாவும் எப்போதும் எனது கார்ட்டூனை விமர்சித்துக்கொண்டே இருப்பார்கள். அப்போது கடுப்பாகத்தான் இருக்கும். அந்த கோபத்தில் வீட்டுக்குப்போய் கோடுகளிடம் சண்டைப் போடுவேன்.. ( இன்னும் கோடுகளை வசப்படுத்த சண்டைப்போட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். )


சென்னைக்கு நான் முதலில் வந்தேன். பின்னாடியே அவரும் வந்தார். எனது குடும்பத்தின் நல்லது கெட்டது எல்லாம் அறிந்தவர். என் திருமணம் வரை சென்னையில் இருவரும் ஒரே வீட்டில் தான் இருந்தோம். இயல்பாக யாருடனும் உடனடியாக நண்பராகும் திறமை கொண்டவர். அதிகமாக பேசுவார். சிபிஎம் கட்சி ஆதரவு நிலையில் இயங்கியவர் என்பதால் அந்த கட்சிக்கேயுரிய சித்தாந்த காமெடி குழப்பங்களும் இருந்ததுண்டு. பிற்பாடு இருவரது வாசிப்புத்தளமும் மாற ஆரம்பித்தப் பிறகு முன்பு இருவரும் எவ்வளவு கோயிந்தாக இருந்திருக்கிறோம் என்பதை பேசி வயிறுவலிக்க சிரித்திருக்கிறோம்.

இருவருக்குமிடையில் கருத்தியல் ரீதியான மோதல்கள் வருவதுண்டு. ஆனாலும் எங்கள் நட்பு தொடரும்.. இந்த கோடுகளை எனக்கு சொந்தமாக்கி கொடுத்ததற்கு நன்றி சொல்லி முடிக்க மாட்டேன் பாலபாரதி.. :)மூலம்/நன்றி : 'கார்ட்டூனிஸ்ட்' பாலா https://www.facebook.com/#!/photo.php?fbid=3330670231910&set=p.3330670231910&type=1

Comments

 1. கோயிந்தா இருந்தா தப்பா?
  இப்படிக்கு
  ஒரு கோயிந்து

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 2. ஹ்ம்ம், மாம்ஸ்க்கு அவ்ளோதானா மருவாதி? அதுவும் ஒரே பின்னூட்டம்.

  ReplyDelete
 3. சூப்பரா ப்ரீசியா இருக்குது..இந்த கார்ட்டூன் நீங்க போட்டதில்லையா :0

  ReplyDelete
 4. இளா,

  அலைகடல் என திரண்டு வரும் என ஒரு மாநாடு ரேஞ்சில கூட்டத்தை எதிர்ப்பார்த்தீங்களோ :-))

  அதெல்லாம் " கவர்ச்சியாக" எழுதினா தான் பாஸ், இதுவே ஒரு பத்திரிக்கைல வந்த ரிடயர்டு நடிகை பேட்டியை அப்படியே அலேக் செய்து என்னமோ நேராப்போய் பேட்டி எடுத்தாப்போல "சொப்பன சுந்தரியின் கலக்கல் குபீர் பேட்டி"னு நாலைந்து சிக் ஸ்டில்ஸ் போட்டு பதிவ போட்டு இருந்தீங்க , கூட்டம் அள்ளும் :-))

  நல்லப்பகிர்வு! த.ம.2012!

  ReplyDelete
 5. வவ்வால்- பார்ட்- 2 நான் எழுதப்போறேன். அதுல ஒரு விசயம் சொல்றேன். கால நேரம் ரொம்ப முக்கியம் :)

  ReplyDelete
 6. மிக நல்ல நினைவுகள்! பகிர்வுக்குநன்றி!

  ReplyDelete

Post a Comment

Popular Posts