பெறுமவற்றுள் யாமறிவது

விமானச்சீட்டு முடிவானவுடனேயே மனசுக்குள் ஒரு பயம், பரபரப்பு வந்து உட்கார்ந்து கொண்டது. இதற்கும் பல விமானங்கள், நேரமெல்லாம் பார்த்துதான் இந்த விமானப் பயணத்தை முடிவு செய்திருந்தேன். அப்பா அமெரிக்க வர சம்மதித்தவுடனே, எந்தெந்த மாதங்கள் சரி பட்டு வருமென்று கேட்டேன், அவருடைய விடுமுறை மாதங்களைச் சொன்னபோதே மனசுக்குள் ஒரு தவிப்பு. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் எங்களுக்கு குளிர் முக்கால், வெயில் கால் என்று வருடங்கள் உருண்டோடும், அதிலும் இந்த வருடமோ வழமைக்கு மேலாகவே குளிர் எங்களை வாட்டியது (குளிர் எப்படி வாட்டும் என்று கேட்கக்கூடாது). கண்டிப்பாக அவர் இருக்கும் காலம் குளிராகத்தான் இருக்கும் என்று முன்பே எனக்கு தெரிந்துவிட்டது. விடுங்கள், இந்தப் பதிவு குளிரைப் பற்றியதல்ல. மீண்டும் பயணத்திற்கே வருவோம்.விமானங்கள் மாறும் நேரம் (Transit Time)  அதிகமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், மொழிப் பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,  பயணப்படியும் அதிகமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,  இப்படி பல இல்லாமல்களை பார்த்து பார்த்து கொள்ள வேண்டி இருந்தது. இந்த விமானம்தான், இந்தப் பயணம்தான் என்று முடிவான போதே வீட்டம்மணி அவர் செய்ய வேண்டிய, கூடாத விசயங்களை மாமனாருக்கு பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார். நிறைய சொல்லி பயமுறுத்திவிடவேண்டாம் என்பது எங்களின் அடிநாதமாக இருந்தது.

பிரச்சினை அமெரிக்காவில் இல்லை, இந்தியாவில்தான். அவரது பயணம் இப்படியாக இருந்தது பெங்களூருவிலிருந்து 9:20க்கு கிளம்பி 11 மணிக்கு மும்பை வந்தடையும். பிறகு 1:30 கிளம்பி அமெரிக்காவின் நுவார்க் வந்தடையும். இப்போது சிக்கலே 11 மணியிலிருந்து 1:30 க்குள்தான். காரணம். பெங்களூருவிலிருந்து மும்பை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து சேரும். பிறகு சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானம் அமெரிக்கா வந்து சேரும். இந்த இரண்டரை மணி நேரத்துக்குள் அப்பா உள்நாட்டு விமானத்திலிருந்து இறங்கி, சர்வதேச விமான நிலையம் சென்று Immigration முடித்து சரியான நேரத்திற்கு, அதாவது 12:30 மணிக்கு Boarding க்கு வந்துவிடுவாரா என்பதுதான். எதாவது உதவியென்றால் அழைக்க ISD வசதிகொண்ட SIM தேவைப்பட்டது. வாங்கச் சொல்லி வாங்கியாச்சு. தங்கை Customer Care தொடர்பு கொண்டு கேட்ட பொழுது Immigrationஐ பெங்களூருலேயே செய்துகொள்ளலாம் என்று சொன்னார்களாம். நானறிந்த வரையில் அது மும்பையாகத்தான் இருக்கும். முதல் குழப்பம். பெட்டிகளை பெங்களூரிலேயே போட்டுவிட்டால் அமெரிக்கா வந்து எடுத்துக்கொள்ளலாம், நல்ல வேளை அதையும் மும்பையில் எடுத்து மாற்றவேண்டிய அவசியமில்லாமல் போனது. அந்தக் குழப்பமில்லை.ச்சு, பயண நாளும் வந்தது. பெட்டி சரியா இருக்கா? பூட்டியாச்சா? 23 கிலோவுக்கு மேல இருக்கா? அது இருக்கா? இது இருக்கா என்று பல கேள்வி பதில் பறந்தன. பெங்களூரில் சரியான நேரத்தில் ஏறியாயிற்று, பெட்டிகள் சரியான எடையில் இருந்தன. எதிர்பார்த்த படியே Immigration மும்பையில்தானென்று சொல்லிவிட்டார்கள். மும்பைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்துவிட்டது விமானம். விமானத்தை விட்டு வெளியே வந்து பேசியபொழுது மணி 11:25.

ன்னும் ஒரு மணிநேரம்தான் இருக்கு. "நீங்க சர்வதேச விமான நிலையம் போயிருங்க. அப்புறம் Immigration. முடிச்சிட்டு கூப்பிடுங்க. சீக்கிரம்" என்று சொன்னதோடு முடித்துவிட்டேன். ஆனால், இங்கே நகம் கடித்தபடியே இருந்தேன். சிறிது நேரம் அறையிலேயே குறுக்கும் நெடுக்கும் நடை. இப்படிக்கும் அப்படிக்கும் நடந்தா மட்டும் படபடப்பு குறையவா போகுது? குறையும்ங்கிற நம்பிக்கைதான். சரியாக, 1 மணிக்கு அழைப்பு வந்தது. விமானத்தில் ஏறத் தயாராக இருக்கிறேன் என்று அப்பா சொன்ன போதுதான் பெருமூச்சு வந்தது. அவர் படபடப்பாகத்தான் பேசினார். அலைச்சல் இருந்திருக்கும் போல, புரிந்தது, ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் "கிளம்புங்க, நீங்க இங்கே வந்து சேரும்போது நானிருப்பேன். நல்லா சாப்பிட்டு தூங்குங்க" என்று சொல்லிமுடித்தேன். பெருங்ககவலை நீங்கியது. விமானத்தில் ஏறிவிட்டால் 15 மணி நேரம், பிறகு இங்கேவொரு  Immigration இருக்கும். ஆனாலும் கவலை இல்லை.ப்படி 2 மணி நேரத்துக்காக நான் பட்ட மன உளைச்சல் பெரிதாகத்தான் தெரிகிறது. இதற்கும், அலைபேசி, Flight Tracking Details என அனைத்து வசதிகளும் இப்பொழுது இருக்கிறது. எப்படியும் தொலைந்து போய்விட மாட்டார் என்று தெரிந்தும், பயம் மனதை அரித்துக்கொண்டேதான் இருந்தது.

ப்படித்தான், 15 வருடங்களுக்கு முன், அலைபேசியில்லாத காலத்தில் என்னைச் சென்னைக்கு, சேலத்திலிருந்து அரசுப் பேருந்தில் ஏற்றிவிட்டு,  புது இடம், புது ஊரான சென்னைக்கு நான் பத்திரமாக வந்து சேர்ந்து பாதுகாப்பாக இருக்கிறேன் என்று அடுத்த நாள் காலை வரை என் தொலைபேசி அழைப்பிற்காக காத்திருந்து, அதைத் தெரிந்துகொள்ளும் வரையில் இதே அப்பாவிற்கு எவ்வளவு மன உளைச்சல்கள் இருந்திருக்கும்?

காலம்தான் எவ்வளவு மாறிவிட்டது?

Comments

 1. முக்கோணம் படத்தோட இன்னோரு வர்சன் - கவனிச்சீங்களா?

  ReplyDelete
  Replies
  1. யோசிக்கிறேன். அப்படியா வருது? எனக்குத் தெரியலையே .. நிஜமா?

   Delete
 2. Wheel chair assistant சேவையை தேர்வு செய்தால் இதெல்லாம் Airlines-ஏ பார்த்துகொள்ள மாட்டாங்களா ? ஆனா, அப்பா-அம்மாவை அந்த சேவையை பயன்படுத்த சொல்லி செய்யுறது இன்னும் பெரிய விஷயம்..

  ReplyDelete
 3. நானோ ஒருவரையும் விடமாட்டேன். மூன்று பிள்ளைங்களும் எங்கெல்லாம் ஹால்ட் ஃப்ளைட் என்று பார்த்து தொலை பேசச் சொல்வேன். உள்ளூரிலிருந்து பங்களூர் போவதானால் மொபைல் இல்லாத காலத்தில் அங்கு போய் செய்தி சொல்ல் வேண்டும் .இது 20 வருடங்களுக்கு முன்னால். நானே ட்ராக்கர். இப்போ கணின் ட்ராக்கர்.

  ReplyDelete
 4. இதே நிகழ்வு, மன உளைச்சல் நவீன் இரண்டாம் முறை வந்து சென்றபோது எங்களுக்கு ஏற்பட்டது. சென்னை- டெல்லி-பாரிஸ், Immigration சென்னையில் தான்னு சொன்னப்பிறகு தான் டிக்கெட் புக் செய்தோம். ஆனாலும் சென்னையில் நடக்கல, பொட்டி மட்டும் நேராக பாரிஸ் புக் பண்ணிட்டாங்க. டெல்லியில் மொத்தமே 1 மணி நேரம் தான் இருந்தது. சென்னையில் சரியான நேரத்திற்கு கிளம்பனும், டெல்லி வானிலை சரியாக இருந்து சரியான நேரத்திற்கு இறங்கனும், நவீன் extension visa விற்கு பாரிஸில் ஒரு Receipt தான் கொடுத்து அனுப்பியிருந்தாங்க. அதை இங்க தடுக்காமல் இருக்கனும் போன்ற பல டென்ஷன் இருந்தது. அப்பாவாச்சும் ஃபோன் செய்து விபரம் சொன்னார், இவரு ஃபோன் வராட்டி பிரச்சனையில்லைன்னு அர்த்தம்னு சொல்லிட்டு கிளம்பினார். அதனால் எங்க டென்ஷன் அதிகமாவே இருந்தது. Flight Tracking வைத்துதான், சரி ஃபோன் வரல, பிரச்சனையில்லைன்னு புரிஞ்சிக்க முடிஞ்சிது.

  ஆனால் இந்த டென்ஷனை தவிர்க்க - Transit timings ரொம்ப குறைவாக இல்லாமல் பார்த்துக்கனும்.. அது மட்டுமே இந்தமாதிரியான மன உளைச்சலை தவிர்க்கும்னு நினைக்கிறேன்..

  ReplyDelete
 5. நாம பிறக்கும்போது அப்பா இப்படிதானே லேபர் வார்டுல சுத்திட்டு இருந்திருப்பாரு...! ட்ச்சிங்

  ReplyDelete

Post a Comment

Popular Posts